தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில், ஆசிரியர் எண்ணிக்கையை, பள்ளிக்கல்வித் துறை ஒழுங்குபடுத்தி வருகிறது.இதனால், ஒன்று முதல் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரையுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை முதற்கட்ட மாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பல பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையில் மொத்தத்தில், 30 முதல் 50 மாணவர்கள் மட்டுமே இருப்பது தெரிய வந்து உள்ளது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை, இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டு, ஆசிரியர் இடங்களை குறைக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளது.வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாற்றி, மொத்த மாணவர்களுக்கும், 1:30 என்றவிகிதத்தில் ஆசிரியர்களை நிர்ணயித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக, தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், கூடுதலாக உள்ள ஆசிரியர் இடங்களை, சரண் செய்யும்படி, தொடக்கக் கல்விஇயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை அதிகம் வைத்திருப்பதால், அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கு தேவையின்றி கூடுதல் மானியம் வழங்க வேண்டி உள்ளது; அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, அந்த இடங்களை திரும்பப் பெற்று, தேவையுள்ள அல்லது காலியான இடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், அரசுக்கு செலவு குறையும்' என்றனர்.
No comments:
Post a Comment