அரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து புதன்கிழமை நடத்திய அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச்சான்றுகள் வழங்கி மேலும் அவர் பேசியது:
அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது நம்முன் உள்ள முதல் கடமை. அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்கள் அனுபவமிக்கவர்களாக உள்ளதால், சிறப்பாக பாடம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதோடு, கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கையும் உயர்ந்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுவருகின்றனர். இந்த சாதனையை மக்களிடம் சொல்ல வேண்டும் என்றார் அவர்.
புதுச்சேரி கல்வியாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி பேசியது:
அன்பும், அரவணைப்பும் நிறைந்த இடமாக அரசுப் பள்ளிகள் திகழ்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் மிகப் பெரிய ஆளுமைகள் உருவாகியிருக்கிறார்கள். வகுப்பறையின் பணி மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல, சமூகத்தை புரிந்துகொள்வது, சமூகத்தில் பங்கேற்பது. இன்று அரசுப் பள்ளிகள் பல்வேறு சாதனைகளை மௌனமாகச் செய்து வருகின்றன. இதை மக்களுக்கு புரியும் வகையில் சொல்லும் பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது. அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதை பெரிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ. மணவாளன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் நா. முத்துநிலவன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் எல். பிரபாகரன், மாநில துணைத் தலைவர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ஆர். நீலா ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இதில், காப்பீட்டுத் துறை கோட்டத் தலைவர் எம். அசோகன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ரமா. ராமனாதன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தசாமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் கு. திராவிடச்செல்வம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டாதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
No comments:
Post a Comment