மொத்தம் 4 வகைப்பாடுகளின் அடிப்படையில் செலவுகள் பிரிக்கப்படுகின்றன. அவை, எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு, கோச்சிங், பி-ஸ்கூல் விண்ணப்பம் மற்றும் கட்டணம் ஆகியவைதான்.
பிரதான எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுகளுக்கான கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை இருக்கும். இதற்கடுத்து, கோச்சிங் வகுப்புகளுக்கான கட்டணம் என்று எடுத்துக் கொண்டால், ரெகுலர் வகுப்பறை பயிற்சிக்கு, ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு, ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.
தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பதற்கு, ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ஆகும். வணிகப் பள்ளிகளுக்கு விண்ணப்பித்தலுக்கு ஆகும் செலவு, நுழைவுத் தேர்வுகளுக்கான கட்டணத்தை ஒத்திருக்கும். அதாவது, இதுவும் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரைதான்.
வணிகப் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் சராசரியாக ரூ.5 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கும். அதேசமயம், நாட்டின் பிரதான வணிகப் பள்ளிகளான ஐ.ஐ.எம்.,கள் மற்றும் XLRI போன்ற வணிகப் பள்ளிகளில், கட்டணம் ரூ.10 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும்.
ஆனால், இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். நாட்டின் பிரதான மற்றும் புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் ஒன்றாக, டில்லி பல்கலையின் எப்.எம்.எஸ்., தனது இரண்டு ஆண்டு ரெகுலர் எம்.பி.ஏ., படிப்பிற்கு மிகவும் குறைந்தளவே கட்டணம் வசூலிக்கிறது.
அதன் வருடாந்திரக் கல்வி கட்டணம் ரூ.10,480 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.எம்.,களுக்கும், டில்லி பல்கலைக்கும், கட்டண விஷயத்தில் உள்ள மலையளவு வேறுபாடு பலரை திகைக்க வைக்கலாம். ஆனால், ஒரு மத்தியப் பல்கலை என்ற முறையில் டில்லி பல்கலையின் மேல் அரசுக்கு இருக்கும் அதிகாரமும், ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் சில விசேஷ அதிகாரங்களும் மிகவும் வேறுபட்டவை.
ஏனெனில், ஐ.ஐ.எம்.,கள் மற்றும் ஐ.ஐ.டி.,கள், அரசின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள பிற கல்வி நிறுவனங்களைவிட, தங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அதிக சுதந்திரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றின் நடவடிக்கைகளில் மத்திய அரசு அடிக்கடி எளிதாக தலையிட்டு மாற்றம் செய்வதில்லை என்பது நினைவு கூறத்தக்கது.
எம்.பி.ஏ., படிப்பதற்கு கல்விக்கடன் பெறுதல்
எம்.பி.ஏ., படிப்பதற்கென்று, அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள், கல்விக்கடனை அளிக்கின்றன. ஒவ்வொரு வங்கியும் பின்பற்றும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் நீங்கள் வங்கியைத் தேர்வுசெய்ய வேண்டும்.
வங்கியானது, முழு தொகையையும் தராது. எனவே, கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அடிப்படையில், வங்கி அளிக்கும் கடன் தொகையை கணக்கீடு செய்ய வேண்டும்.
பெரும்பாலான வங்கிகளில், இந்தியாவில் எம்.பி.ஏ., படிப்பதற்கு ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பதற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது. ரூ.4 லட்சம் வரை கடன் பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் தேவையில்லை. அதேசமயம், பெற்றோர் அல்லது காப்பாளரின் கூட்டு உறுதிமொழி வேண்டும்.
கடனுக்கான அதிகபட்ச காலகட்டம் ரூ.7 லட்சம். ரூ.4 லட்சம் வரையான தொகைக்கு மார்ஜின் கிடையாது. அதேசமயம், ரூ.4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்கு இந்தியாவில் படிப்பதற்கு 5% வரை மார்ஜின் உண்டு மற்றும் வெளிநாட்டில் படித்தால் 15% மார்ஜின் உண்டு.
சில வங்கிகள், பெண்களுக்கு வழங்கும் கல்விக் கடனில் விதிக்கப்படும் வட்டியில், 0.5% வரை தள்ளுபடி அளிக்கின்றன. அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சராசரி வட்டி விகிதம் 10.5% ஆகும்.
No comments:
Post a Comment