கல்வி உரிமைச் சட்டத்தால் அடித்தட்டு மக்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகப் பிரச்சாரங்கள் நடக்கின்றன. மத்திய ஐமுகூ அரசுக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி இதைத் தனது முக்கிய சாதனையாகக் கூறிக்கொள்கிறது. நடைமுறையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்குதடையின்றி தங்களது வர்த்தகத்தைத் தொடரவும்,
அரசு-தனியார்-கூட்டு என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கவும் உதவுவதாகவே சட்டம் கையாளப்படுகிறது.
இது, பொருளாதாரத்திலும் சமூக அடிப்படையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளுக்குப் பெரும் தனியார் நிர்வாகங்கள் தங்களது கதவுகளை மூடுவதற்குத்தான் தோதாகிறது.இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான், சென்ற ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்-60. இந்தக் குழந்தைகளுக்கு மேற்படி பள்ளிகள் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டும் என்று சொல்கிறது சட்டம். ஆனால், அதற்கான விண்ணப்பப் படிவங்களை வழங்குவதற்கான கால அளவு மே 3 முதல் 9 வரை என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஒரு வார காலத்தில், அந்த மக்கள் தகவலறிந்து, பள்ளியைத் தேர்வு செய்து, வரிசையில் நின்று, உரிய ஆவணங்களை இணைத்து எப்படி தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியும்? சரி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகள் இந்தச் சட்டத்தில் இருக்கின்றன, அவற்றைத் திருத்துவதற்கு நீண்ட நெடும் போராட்டங்கள் தேவைப்படுகின்றன என்றாலும், அத்தகைய கடந்த காலப் போராட்டங்களின் பலனாகவே, இந்தச் சட்டமாவது வர முடிந்தது.
பள்ளிகளின் அருகாமைப் பகுதிகளில் வசிக்கிற விளிம்புநிலை மக்களில் ஒரு பகுதியினருக்காவது இதன் மூலம் “தரமான” கல்வி கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம்.பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்பதற்கு, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குக் குறைவாக உள்ள குடும்பங்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதுவே தினக்கூலித் தொழிலாளர் களாகவும், நடைபாதை வியாபாரிகளாகவும், தெருவோரத்தில் குடியிருப்போராகவும் வறுமைக் கோட்டின் அடி வரிசைகளில் இருக்கிற மக்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கிறது என்று கல்வி உரிமை இயக்கத்தினர் விமர்சிக் கிறார்கள். நலிவுற்றவர்களுக்கு இத்தகைய பள்ளிகளில் விண்ணப்படிவங்கள் வழங்கப்படுகின்றன என்ற தகவலே போய்ச் சேர்வதில்லை.அதே போல், மாற்றுத் திறனாளிகள், பழங்குடி யினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு குறித்தும் சட்டமோ, அரசாணையோ தெளிவுபடுத்த வில்லை. இதனைத் தனியார் நிர்வாகங்கள் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஏற்கெனவே இப்பள்ளிகளில் இப்பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் எத்தனை பேர் சேர்க்கப்பட் டிருக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடையாது.
இந்த சட்டப்பூர்வ ஏற்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பது மத்தியஅரசால் நடத்தப்படும் கேந்திர வித்யாலயாக்கள் மட்டுமே என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆம், மத்திய - மாநில அரசுகளே பொறுப்பேற்கிற பொதுப்பள்ளி முறை வலுப்படுத்தப்படுவதில் தான் உண்மையான, முழுமையான தீர்வு இருக்கிறது. அதுவரையில், அரசாணைகள் இந்த மக்களுக்குப் போதிய கால அவகாசம் அமை வதையாவது உறுதிப்படுத்தியாக வேண்டும்.
1 comment:
அரசு -தனியார் கூட்டு என்ற பெயரில் ஊர் முதலை அடித்து உலையில் போடத்தான் பேரியக்க பெரிய மனிதர் ரதயாத்திரை போனாரோ.?
Post a Comment