Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 24, 2014

    ஆசிரியர் வேலை கிடைக்குமா? விரக்தியின் விளிம்பில் 73,000 பேர்:வழக்குகளின் பிடியில் தேர்வு வாரியம்

    கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி..டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற

    தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


    நடந்தது என்ன? கடந்த, 2013, ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த ஜனவரி 20 - 27ம் தேதி வரை, நடந்து முடிந்தது. இறுதிப் பட்டியல் வெளியிட, தேர்வு வாரியம் தயாராக இருந்த நிலையில், இடஒதுக்கீடு பிரிவினருக்கான, 'மதிப்பெண் தளர்வு' அறிவிப்பை, கடந்த பிப்ரவரி 3ல், முதல்வர் வெளியிட்டார். இதற்குப் பிறகு தான், பெருவாரியான குழப்பங்கள், அரங்கேறத் துவங்கின.

    என்ன பிரச்னை? பொதுவாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 60 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும். அதாவது, மொத்த மதிப்பெண்களான, 150க்கு, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், முதல்வரின் அறிவிப்புப்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் இடஒதுக்கீடு பிரிவினர், 150க்கு, 82.5 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. இதை, 82 மதிப்பெண்களாக தேர்வு வாரியம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.இந்த வகையில், 2013 தேர்வில், 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தற்போது நடைபெற்று வரும் நிலையில், 'தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இத்தகைய சலுகை நியாயமில்லை' எனக்கூறி, ஒருதரப்பினர் வழக்கு தொடுத்துள்ளனர். 'இந்த சலுகை, எங்களுக்கும் வேண்டும்' என, 2012 தகுதித் தேர்வில், 82 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள், மனு கொடுத்துள்ளனர்.

    'வெயிட்டேஜ்'க்கும் எதிர்ப்பு :'மதிப்பெண் சலுகை' அறிவிப்பு வந்த சில நாட்களில், தகுதித் தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில் மாற்றம் செய்து, பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 150க்கான மதிப் பெண்கள், 100க்கு என, கணக்கிடப்படும். அதில், முதல், 60 மதிப்பெண்களை, தகுதித்தேர்வு மதிப்பெண்ணும், மீதமுள்ள, 40 மதிப்பெண்களை, தேர்வு எழுதியவர்களின் முந்தைய கல்வித் தகுதி மதிப்பெண்களும் (பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்.,) நிர்ணயிக்கும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு மிக கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்த புதிய முறையை எதிர்த்தும், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டம், பாலமேட்டை சேர்ந்த கண்ணன், தான் தொடர்ந்துள்ள வழக்கு பற்றி கூறியதாவது:தகுதித் தேர்வில், 'சலுகை மதிப்பெண்கள்' மூலமாக, தகுதியற்ற நபர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதுவும் போக, ஒரு விளையாட்டு முடிந்தவுடன், அது தொடர்பான விதிகளை அமல்படுத்துவது எவ்வளவு அபத்தமோ, அப்படித்தான் இருக்கிறது, அரசின் மதிப்பெண் சலுகை உத்தரவு!தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்திருக்கும் நிலையில், மதிப்பெண்ணை தளர்த்தி, புதியதாக, 46 ஆயிரம் பேரை தேர்ச்சி அடைய வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.


    அதேபோல், புதிய, 'வெயிட்டேஜ்' முடிவை முற்றிலும் நீக்கியாக வேண்டும். கல்வித் திட்டங்கள், காலத்திற்கேற்ப மாறிவரும் நிலையில், 20 வருடத்திற்கு முன்னால், பிளஸ் 2 படித்தவர்களின் மதிப்பெண்ணையும், 10 வருடங்களுக்கு முன், பிளஸ் 2 முடித்தவர்களின் மதிப்பெண்ணையும், ஒரே தளத்தில் ஒப்பிட்டு, மதிப்பெண் வழங்குவது ஏற்புடையதல்ல. அப்போது, 60 சதவீத மதிப்பெண் வாங்குவதே, பெரிய விஷயம்.இப்போது, 'ப்ளூ பிரின்ட்' என்ற, மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட வசதிகளுடன், மிகச் சாதாரணமாக, மாணவர்கள், 80 சதவீதத்தை தொட்டு விடுகின்றனர். இதே நிலைமை தான், பட்டப்படிப்புக்கும், பி.எட்., படிப்புக்கும் உள்ளது. ஆக, இந்த, 'வெயிட்டேஜ்' முறையை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முறையால், தகுதியும், அனுபவமும் வாய்ந்த நபர்கள் ஓரங்கட்டப்படுவர். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


    மதிப்பெண் சலுகை ஏன்? தகுதித் தேர்வில், இடஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது கூட, 'மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களின் தரத்தில் எவ்வித சமரசமும் இல்லை' என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தகுதித்தேர்வு சம்பந்தப்பட்ட தமிழக அரசின் அரசாணை 181 - சுட்டிக்காட்டி, 'உடனடியாக, மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்' என, தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், அழுத்தம் கொடுத்ததாலேயே, அரசு உடனடியாக இம்முடிவை எடுத்தது.அதேவேளையில், 5 சதவீத மதிப்பெண் சலுகையில், தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்து உள்ளதால், காலி பணியிடங்களுக்கு ஏற்ப, தேர்ச்சி விகிதத்தை சரிகட்டும் வகையில், 'வெயிட்டேஜ்'முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    ஆரோக்கிய சூழலா? 'மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில், இத்தகைய குழப்பங்கள் நடப்பது ஏற்புடையது தானா?' என்பது குறித்து, கல்வியாளர் வி.கே.எஸ். சுபாஷ் கூறியதாவது: கடந்த, 2009ல் சட்டமாக்கப்பட்டு, 2010 ஏப்ரலில், உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் நடைமுறைக்கு வந்த, 'இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம்' தான், இந்த தேர்வுக்கு அடிப்படை. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, கல்வியை உறுதி செய்யும் வகையிலும், அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் வகையிலும் தான், இந்த தேர்வு நடைமுறைக்கு வந்தது.கடந்த 2012ல், தமிழக அரசு நடத்திய முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில், வெறும், 2,448 பேர் தான் தேர்ச்சி பெற்றனர். அப்போது, காலி பணியிடங்களின் எண்ணிக்கை, அதிகமாக இருந்ததால், சுலபமான கேள்விகளோடு, மறுதேர்வு நடத்தி, 15 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு, பணி ஆணைகளை அரசு வழங்கியது.இப்படி நடந்த மறுதேர்வு மூலம், ஆசிரியர்களுக்கான தகுதியில் சமரசம் செய்து கொள்ள தயாரான அரசு, இந்த வருடம் மதிப்பெண்ணில் சலுகை காட்டி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேர்வு செய்திருக்கிறது. இத்தனை பேருக்கும் பணி கொடுப்பது சாத்தியமில்லை. அதனால் தான், புதிய, 'வெயிட்டேஜ்' முறை புகுத்தப்பட்டிருக்கிறது என்று, பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்திருக்கின்றனர். வழக்குகளின் போக்கு எப்படி இருந்தாலும், தீர்ப்பு, மாணவர்களுக்குசாதகமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.



    வேலை கிடைக்குமா? கடுமையாக உழைத்து, தீவிர ஈடுபாட்டுடன் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றிருக்கும் எதிர்கால ஆசிரியர்கள், தற்போது நிம்மதியாக இல்லை. 'வேலை கிடைக்குமா?' என்ற சோர்வு, அவர்களின் மனம் முழுக்க நிறைந்திருக்கிறது. இது குறித்து, 2013 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும், லோகேஸ்வரன் கூறுகையில், ''நான், 98 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எல்லாம் முடிந்து விட்டன. ஆனால், வேலை கிடைக்குமா என்பது தெரியவில்லை. காலி பணியிடங்களின் எண்ணிக்கை, எவ்வளவு என்று தெரியாத நிலையில், எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? இது போதாதென்று, 5 சதவீத மதிப்பெண் சலுகை, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைகளை எதிர்த்து, வழக்குகள் தொடுத்திருக்கின்றனர். என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை,'' என்றார்.

    வழக்குகள் எத்தனை? கடந்த, 2013 தகுதித்தேர்வு சம்பந்தமாக மட்டும், குறைந்தது, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனிமேலும், வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது
    என்கின்றனர் கல்வியாளர்கள்.

    அடுத்தது என்ன? தேர்தல் முடிய வேண்டும். வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாக வேண்டும். எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், 2013ல் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் (டி.ஜி.டி.,) மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான (எஸ்.ஜி.டி.,), இறுதிதேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

    பணியிடங்கள் எத்தனை? மொத்தம், 73 ஆயிரம் பேர் தேர்வாகியிருக்கும் நிலையில், அத்தனை காலி பணியிடங்கள் இருக்குமா என்ற சந்தேகம், தேர்ச்சி பெற்றிருக்கும் அனைவரிடமும் இருக்கிறது. மே மாதத்தில் வெளியிடப்பட உள்ள, காலி பணியிடங்கள் பற்றிய விவரத்திற்கு பின்பு தான், உண்மை நிலை தெரியவரும்.அரசு செய்ய வேண்டியது குழந்தைகளில், 6 - 14 வயதுக்குள்ளோருக்கான கல்வியை உறுதி செய்ய உருவான இலவச கட்டாய கல்விச் சட்டம், அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்கச் சொல்கிறது; ஆனால், தமிழகத்தில் அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வை, அடிக்கடி நடத்தி, ஆசிரியர்களுக்கான தகுதியை மேம்படுத்த சொல்கிறது; அதற்கும் அரசு வழி செய்யவில்லை. இது குறித்து, கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது:இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் ஷரத்து 23 (2)ன்படி, இச்சட்டம் அமலுக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், அதாவது, ஏப்ரல், 2015க்குள், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும், இந்த தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்! ஆனால், தமிழகத்தில் உள்ள 99 சதவீத ஆசிரியர்கள், இதில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. இதுகுறித்து, மாநில அரசும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆக, வருடத்திற்கு ஒரு முறை, காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வையாவது, திறம்பட நடத்தி, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தேர்வு எழுதியவர்கள் சார்பாக, தற்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் நியாயத்தை, பாரபட்சமின்றி ஆராய்ந்து, வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, 'தகுதியுள்ள ஒரு ஆசிரியர் ஏமாற்றப்படுவது, 100 மாணவர்களின் தோல்விக்கு சமம்' என்பதை, அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என்பதே, ஒட்டு மொத்த கல்வியாளர்களின் விருப்பம்.


    4 comments:

    Anonymous said...

    hai sir am yuvaraj from karur disct.nan 2012 tet examla paper two la 89 mark eduthu fail aanen. ippo 115 mark eduthu pass panniruken.weitage. 83. naan last time fail aKi varuthapattatha vida ippo pass panni innum wait panrathu rompa kasdama irikku. nan mattum illa ennamari hard work panni pass pannina ellarukume kasdama irukku.naanga govt mela rompa kovama irukoom.

    Anonymous said...

    itha govt mentakku 40 thum naaum than 90 above candidates pls aviod mankutta govt pls vote for nota

    phenix said...

    DONT BREAK YOUR WILL POWER.THINK POSITIVE"ALL IS WELL"

    Anonymous said...

    kasta pada koodadhu. aana govt job mattum venum. idhu endha vidhathula neyam? dear friends nalla padinga. nall job kedaikum. adhi vittu vittu 82 ku pass kodunga 75 ku pass kodunga nu poraduradhu endha vedhathula neyam? 90 mark edukadhavangaluku edhuku govt job? atleast 60% eduka mudiyadha unnala epdi padam nadatha mudium?