ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கை வருமாறு:
ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வரும் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி, என்னுடைய ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தியது.
இக்கூட்டத்தில், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். பொதுவாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிப்பது, அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவது என்ற நான்கு கோரிக்கைகளை முக்கியமான கோரிக்கைகளாக வலியுறுத்தி பேசினர்.
இது குறித்து விரிவாக விவாதித்த பின்பு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் குழு திருத்தியமைக்கப்பட்டதை எடுத்துரைத்து, இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது என்றும், அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஊதிய விகிதம் திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் குறித்து, இதற்கென அமைக்கப்பட்ட ஊதியக் குழு பரிசீலித்து வருவதாகவும், இக்குழு இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், இதில் மேலும் காலதாமதம் ஏற்படாது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்குமென்றும், அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும், அதன் தற்போதைய நிலை குறித்தும் தெளிவாக விளக்கி, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment