ஓய்வூதியம் என்பது மிக முக்கிய மான ஒரு கோரிக்கை. 30, 35 ஆண்டுகள் உழைத்த ஒருவர் வயதான காலத்தில் தனது குடும்பச் செலவையும், தனது மருத்துவத் தேவை உட்பட அனைத் தையும் நிறைவேற்ற இருக்கிற ஒரே வாய்ப்பு ஓய்வூதியம் தான்.
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தம் திடீரென்று ஏற்பட்டதல்ல. நீண்ட காலமாக அவர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களது பிரதான கோரிக்கைகள் என்ன? புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஏழாவது சம்பளக் கமிசன் பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பவையே. மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பலகட்டப் போராட்டங்களை நடத்தியது. ஆசிரியர் அமைப்புகளும் தனித்தனியாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தின.
அப்போதெல்லாம் தமிழக அரசு இக்கோரிக்கைகள் நியாயமில்லை என்றோ, ஏற்கத் தகுந்தது இல்லை என்றோ, சாத்தியமற்றது என்றோ கூறியது இல்லை. 2011 அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தாங்கள் மீண்டும்ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்படும் என்றும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற முறைகள் ஒழிக்கப்பட்டு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் காலமுறை ஊதியம் போன்ற வாக்குறுதிகளை அமலாக்குவார் என்று பொறுமை காத்து, அரசுக்கு முறையீடுகளை அனுப்பிக் கொண்டே இருந்தனர். 5 ஆண்டுகள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். பலன் கிடைக்கவில்லை. ஆட்சியினர் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு தாங்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளையே அமலாக்க மறுத்தனர். இந்நிலையில் தான் 5 ஆண்டுகள் பொறுமை காத்த அரசு ஊழியர்கள் ஆட்சியின் காலம் முடிவடையும் நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்து 2016 பிப்ரவரியில் காலவரையற்ற போராட்டதை நடத்தினர். 10 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்த பின்னர் தான் அரசு இறங்கி வந்தது. தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் கொண்டக் குழுவினர் முதலைமைச்சர் உத்தரவின் பேரில் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
உறுதியான அறிவிப்புகள் இல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடையாது என்ற நிலையை உணர்ந்தமுதலமைச்சர் ஜெயலலிதா 19.02.2016 இல் விதி எண் 110 ன் கீழ் 11அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறும் வழிமுறைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அவர்களது அறிக்கையைப் பெற்ற பின்னர் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்படும் என்றும், காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த நடைமுறைகள் குறித்து வல்லுநர்குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையைப் பெற்று அமலாக்கப்படும் என்றும் பல அறிவிப்புகளை அறிவித்த அடிப்படையில் அந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்புகள் அனைத்தும் இதுவரை அமலுக்கு வரவில்லை.
ஓய்வூதியத்துக்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஒன்றே முக்கால்வருடங்கள் கடந்து விட்டன. வல்லுநர் குழு அறிக்கை பெறப்படாமலேயே அக்குழு மட்டுமே மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை அம்மா அரசு என்று அறிவித்துக் கொள்ளும் அதிமுக அரசு செயல்படுத்த மறுத்து, ஏமாற்றுவதாலேயே அவர்கள் வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு முன்னர் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், கோட்டை நோக்கி பேரணி, ஒரு நாள்வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் இந்த அரசு வஞ்சக நாடகம் ஆடுவதை உணர்ந்ததால் தான் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் என்ற முடிவை எடுக்கின்ற கட்டாயத்துக்கு அரசால் தள்ளப்பட்டனர். ஓய்வூதியம் என்பது மிக முக்கியமான ஒரு கோரிக்கை.
30, 35 ஆண்டுகள் உழைத்த ஒருவர் வயதான காலத்தில் தனது குடும்பச் செலவையும், தனது மருத்துவத் தேவை உட்பட அனைத்தையும் நிறைவேற்ற இருக்கிற ஒரே வாய்ப்பு ஓய்வூதியம் தான். நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான மசோதா வந்த போது எதிர்த்து வாக்களித்தது அதிமுக. ஜெயலலிதா அத்திட்டத்தை நிராகரித்தார். ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் 1.1.2003 முதல் அமலாக்கப்படுகிறது. இதற்காக 1.4.2003 முதல் நியமனம் செய்யப்பட்ட 4,70,859 அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, மாதா மாதம் அவர்களது சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட ரூ.18,000 கோடி பணம் எந்த தனி கணக்கிலும் பராமரிக்கப்படவில்லை.
அப்பணம் என்னாயிற்று என்பதே தெரியவில்லை. ஏற்கெனவே மிகப் பெரும் கடன் சுமையில் இருப்பதாகக் கூறும் தமிழக அரசு அதையும் செலவழித்துவிட்டதோ என்ற கவலையும் நியாயமானதே. போக்குவரத்துக் கழகங்களில் இந்த நிலையைத் தான் ஓய்வூதியர்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட நிலையில் தான் அரசு ஊழியர்கள் வேறு வழியின்றி இந்த போராட்டத்தில் தள்ளிவிடப்
பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்திற்கு தமிழக அரசு தான் பொறுப்பே தவிர அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்ல. மேலும் தமிழக அரசு நம்பிக்கையிழந்த அரசாக உள்ளது. நீட் வராது, வராது என்று தொடர்ந்து தமிழக அரசு கூறிய நிலையில் அதை நம்பியிருந்த தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டனர். அதனால் மனமுடைந்த மாணவி அனிதாவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒவ்வொரு விஷயத்திலும் அரசு மக்களை ஏமாற்றும் நிலையில் அரசு ஊழியர்கள் வேறு வழியில்லாமல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தான் மதுரையைச் சார்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்துக்கு தடை பெற்றுள்ளார். அவரது அரசியல் பின்னணி என்ன, அவரது நோக்கம் என்ன?என்பது தெரியவில்லை. கட்டாயம் அவருக்கு ஒரு அரசியல் நோக்கம் இருந்திருக்கும். அவர் தனிப்பட்டமுறையில் பாதிக்கப்பட்டவரல்ல.
பொது நலன் என்ற பெயரில் அவர் தனது அரசியல் நோக்கத்துக்கு நீதிமன்றத்தை பயன்படுத்தி உள்ளார். பொது மக்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர். கொள்கை அளவில் ஏற்கப்பட்டு, அரசால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அமலாக்கவே இந்த போராட்டம். இது திடீரென்று அறிவிக்கப்பட்டு நடக்கும் வேலை நிறுத்தம் அல்ல. போராடும் அரசு ஊழியர்கள் தரப்பை கேட்காமலேயே நீதிமன்றம் தடை விதிப்பதும், பின்னர் நீதிமன்ற அவமதிப்பு என்பதும் மறுக்கப்பட்ட நீதியாகாதா? நம்பகத் தன்மையை இழந்த மாநில அரசு.
நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் தேதிக்கான கெடு விதித்தும் இதுவரை நீதிமன்ற தீர்ப்பை அமலாக்கியதா? மக்களை மட்டுமல்ல, நீதிமன்றத்தையே மதிக்காத அரசு என்பதற்கு பல உதாரணங்களை கூற இயலும். இந்நிலையில்தான் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உணர்வுகளையும் நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு அரசே பொறுப்பு என்பதை மக்கள் புரிந்துள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டம் என்பது பொழுது போக்குக்கான நிகழ்வல்ல. இது தன்னை வருத்தி செய்யப்படும் ஒரு வேள்வி. வேறு வழியின்றி இந்த போராட்டம் நடக்கிறது பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இவ்வேள்வியில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். அனைத்துத் தரப்பினரும் அவர்கள்பால் உள்ள நியாயத்தை புரிந்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்ப்பந்திக்க முன் வரவேண்டும்.
No comments:
Post a Comment