கணக்கு கேட்டு, விடையை சரியாக கூறிய ஆசிரியையிடம், விடை தவறு என கூறி, அமைச்சர் எச்சரித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் ஆய்வு:
உத்தரகண்டில், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில கல்வி அமைச்சராக இருப்பவர், அரவிந்த் பாண்டே. தலைநகர் டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளிக்கு, அமைச்சர் பாண்டே சென்று, கல்வியின் தரம் பற்றி ஆய்வு செய்தார். அப்போது, ஒரு வகுப்பில், மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர், அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
(-) + (-) = ?
வகுப்புக்குள் நுழைந்த அமைச்சர், ஆசிரியையிடம் கேள்வி கேட்க விரும்பினார். '(-) + (-) = ?' என கேட்டார். இதற்கு ஆசிரியை, '(-)' என, சரியாக பதில் அளித்தார். 'இந்த பதில் தவறு' என கூறிய அமைச்சர், '(+)'தான் சரியான விடை என, தெரிவித்தார். ''நானும் அறிவியல் படித்துள்ளேன். கணித பாடத்தில், '(-) + (-)' = (+) ; ஆனால் ரசாயன பாடத்தில், '(-)' என்பதுதான் விடை,'' என அமைச்சர் கூறினார்.
எச்சரிக்கை:
பின், வகுப்பறையை விட்டு வெளியேறும் முன், ''நீங்கள் பெண் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செல்கிறேன்,'' என, எச்சரித்து சென்றார். அமைச்சரின் இந்த செயல், பதிவான வீடியோ, சமூக வலைதளங்ளில் வெளியானது. இதையடுத்து, அமைச்சரை விமர்சித்து, பலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
நிரூபியுங்கள்:
இது பற்றி, அமைச்சர் பாண்டே கூறுகையில், ''ஆசிரியர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அந்த வகுப்பில், ஆசிரியையும், மாணவிகளும், எந்த புத்தகமும் வைத்திருக்கவில்லை. பாடம் தொடர்பான கேள்விகளும், பதில்களும் இடம் பெற்றிருந்த ஒரு 'கைடு' புத்தகத்தை வைத்து, ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார். என் பதில் தவறு என நிருபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்,'' என்றார்.
No comments:
Post a Comment