ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ முன்வைத்துள்ளது.இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாகபல்வேறு கட்டப் போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது. இந்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும், இந்தப்பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 21 -ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை ஆஜராகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார்.
No comments:
Post a Comment