அரசு பள்ளி ஆசிரியர்கள் பேட்டி அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், பல செயல்முறை பயிற்சிகளை வழங்குகின்றனர்.
இதில், பல நேரங்களில் முரண்பாடு ஏற்படுகிறது. இதை உயரதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பாதிக்கப்படும் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களிடம் முறையிடுகின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மீது, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களை கட்டுப்படுத்த, மாவட்ட அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
* ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' மூலம், தகவல்களை பரிமாறிய மூன்று ஆசிரியர்கள் மீது, கலெக்டரிடம் புகார் செய்து, முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார். பின், அந்த நடவடிக்கை உயரதிகாரிகளால் நிறுத்தப்பட்டது
* நீலகிரி மாவட்டத்தில், பல விதிமீறல்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஆசிரியர் சங்க தலைவர் ஒருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தற்போது, திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதில், 'வேலை நேரத்தில், வெளியாட்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், வேலை நேரத்தில், பத்திரிகை நிருபர்களை சந்தித்து, பேட்டி தரக்கூடாது; மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிட்டு உள்ளார். இது போன்ற நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள ஆசிரியர் சங்கங்கள், இப்பிரச்னை குறித்து, விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளன.
No comments:
Post a Comment