தமிழகத்தில், அரசின் உயர் கல்வித் துறையின் கீழ், 13 பல்கலைகள், அதன் கீழ், 1,464 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 4.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். படிப்பை முடிப்போருக்கு, ஆண்டுதோறும், இரண்டு முறை பட்டமளிப்பு விழாக்கள் நடத்தி, பட்டங்கள் வழங்கப்படும். தொலை நிலை கல்வியில் படிக்கும், இரண்டு லட்சத்திற்கும் மேலானோருக்கும், ஆண்டு தோறும் பட்டங்கள் வழங்கப்படும்.
இன்ஜி.,கல்லுாரிகளுக்கான அண்ணா பல்கலை, கலை மற்றும் உயர் படிப்புக்கான சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவற்றில், ஓர் ஆண்டாக பட்டமளிப்பு விழாக்கள் நடக்காமல், மாணவர்களுக்கு பட்டம் வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது.
படிப்பை முடித்த மாணவர்கள், புதிதாக பணிக்கு செல்லமுடியாமலும், மேற்படிப்புகளில் சேர முடியாமலும், கண்ணீர் வடிக்கின்றனர். இந்த பல்கலைகளில், துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததால், பட்ட சான்றிதழில் கையெழுத்திட, உரிய அதிகாரி இன்றி, பட்டங்கள் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் பல்கலை மானியக்குழு உத்தரவின்படி, படிப்பை முடித்த, ஆறு மாதத்திற்குள் பட்டம் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment