தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதில் வாக்குபதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர்.
இவர்களில் 80 விழுக்காடுக்கு மேல் பெண் ஆசிரியர்கள் என்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மற்றும் கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும், தேர்தல் பணியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக சிவகங்கை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி சு.மலர்விழி அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியிலிருந்து மாநிலத் தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிக்pச்சை செய்துகொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டுமாறும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் நேர்மையாக நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment