ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் பள்ளிகளில் சுமார் 5.8 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் மட்டும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு "டெட்' எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கடைசியாக 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு, வழக்குகள் காரணமாக நடைபெறவில்லை.
இந்த நிலையில், இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பு 2016, நவம்பர் 15 என மாற்றியமைக்கப்பட்டது. இவர்களுக்கு இன்னும் ஓர் ஆண்டே மிஞ்சியிருப்பதால், தமிழக அரசு இந்த ஆண்டு இரண்டு முறையாவது தகுதித் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரி வருகின்றனர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment