பத்து நாடுகளின் மக்கள் தொகையை கொண்ட தமிழகத்தில், தாய்மொழியில், உயர்கல்வி சாத்தியமில்லை என்பது வெட்கக் கேடானது, என, இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீத் குறைபட்டுக்கொண்டார்.
சென்னை பல்கலையின் இதழியல் துறை சார்பில், வானொலி குரலும் தமிழும் என்ற கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. அதில், இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீத் பேசியதாவது: முன்பெல்லாம், ஊடகங்களில், தகவல், கல்வி, பொழுதுபோக்கு என்ற கலவை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், பொழுதுபோக்கு மட்டுமே, மிகுதியாக இருக்கிறது.
அவற்றில் ஒலிக்கும் குரல்களில், ஒலிப்பு முறையும், முறையாக இல்லை. இப்படியே போனால், இன அடையாளம் மட்டுமல்லாமல், மொழி அடையாளத்தையும் நாம் இழந்து விடுவோம். மொழி அடையாளம், மனிதனுக்கு மிக முக்கியமானது.
தமிழறிஞர்கள், பெயர் சொல்லுக்கு தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிப்பதிலும், மேடையில் பேசுவதிலும், பட்டி மன்றம் நடத்துவதிலும், திரைப்படங்கள் எடுப்பதிலுமே பெருமை கொள்கின்றனர். ஆனால், இது, தமிழகத்திற்கும், தமிழின மக்கள் தொகைக்கும் போதாது. காலத்தால், மிக பிந்தைய சிங்களத்தில் கூட, பொறியியல் கல்வி உட்பட அனைத்து கல்வியும் கிடைக்கிறது.
பல சாதனைகளை படைத்து வரும் நார்வே, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல, 10 நாடுகளின் மக்கள் தொகையை கொண்ட தமிழகத்தில், தாய்மொழியில், உயர் கல்வி சாத்தியமில்லை என்பது, வெட்கக் கேடானது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாய்மொழி கல்வியால், மற்ற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்வது பாதிக்கப்படும் என்கின்றனர். தமிழில் படித்தவர்களாவது, தமிழகத்திற்குள் சேவை செய்யட்டுமே. தமிழறிஞர்கள், அறிவியல் கல்வியை, தாய்மொழியில் கற்பிக்க முயற்சி எடுக்காவிட்டால், அடுத்த தலைமுறை, தாய்மொழி அறியாதவர்களாகத்தான் இருப்பர். இவ்வாறு அவர் பேசினார்.