‘‘தமிழ்நாட்டில் 15 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை’’ என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த 2011–ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் படிப்பு அறிவு பெற்றவர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில் இந்திய அளவில் எழுத படிக்க தெரிந்தவர்களின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2001–ம் ஆண்டில் படிப்பு அறிவு பெற்றோரின் எண்ணிக்கை 64.84 சதவீதம் ஆக இருந்தது. தற்போது அது 74 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதில் நகர்புறங்களில் 84 சதவீதமாகவும், கிராம பகுதிகளில் 68 சதவீதமாகவும் உள்ளது.
அதே நேரத்தில் 24 கோடியே 88 லட்சம் கூட்டு குடும்பங்களில் குறைந்தது தலா 4 பேர் மட்டுமே (7 வயதுக்கு மேற்பட்டோர்) படித்துள்ளனர். ஆனால், 2 கோடியே 42 லட்சம் குடும்பங்களில் தலா ஒருவர் மட்டுமே படித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 15.1 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை. இந்த குடும்பங்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் கிராம புறங்களில் 11 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு எழுத படிக்க தெரியாது.
அதே நேரத்தில் நகர பகுதிகளில் 4 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு படிப்பு அறிவு இல்லை. சென்னையில் தான் படிப்பு அறிவு இல்லாதவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 2.7 சதவீதமாக உள்ளது.
அதன் அண்டை மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூரில் படிப்பு அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 5.3 மற்றும் 5.33 சதவீதமாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்பு அறிவு உள்ளவர்களின் விகிதம் 91.75 சதவீதமாக அதிக அளவில் உள்ளது. இங்கு 14,831 பேர் மட்டுமே படிக்காதவர்களாக உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக அளவில் 14.97 சதவீதம் குடும்பங்களில் படிப்பு அறிவு இல்லை. அதை தொடர்ந்த நாமக்கல் (13.73 சதவீதம்), சேலம் (12.64 சதவீதம்) மாவட்டங்களில் படிப்பறிவு அற்றோர் அதிகம் உள்ளனர்.
படிப்பறிவு இல்லாதோர் அதிகம் உள்ளோர் மாநிலமாக பீகார் திகழ்கிறது. இங்கு 33 லட்சத்து 59 ஆயிரம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை. அதே நேரத்தில் கல்வி அறிவு பெற்றோரின் முதல் மாநிலமாக கேரளா திகழ்கிறது. இங்கு 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் (1.5 சதவீதம்) மட்டுமே படிப்பறிவு அற்றவர்கள்.
No comments:
Post a Comment