Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 6, 2012

    புதிய எண்ணங்களுடன் வெற்றி காணுங்கள்‘: அப்துல் கலாம்

    ‘தினமலர்’ மற்றும் டி.வி.ஆர். அகாடமியின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
    அவரது சிறப்புரையின் முழுத்தொகுப்பு:

    புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க

    எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.

    வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,

    என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.

    நண்பர்களே, இன்றைக்கு தினமலர் நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் வந்து மாணவர்களாகிய உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்பிற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை வருடம் தோரும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். மாணவர்களை பரிச்சைக்கு தயார் படுத்தி, மேல்படிப்புக்கான வாய்ப்புகளை தெளிவு படுத்தி அதன் மூலம் மாணவர்களை தங்களது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்ககூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் தினமலர் நாளிதழுக்கு எனது பாராட்டுக்கள். இந்த பணி ஒரு அரும் பெரும் பணியாகும். எனவே மாணவ நண்பர்களே, "புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க" என்ற தலைப்பில் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    வெற்றிக்கவிதை

    உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு எழுச்சியுற்ற இளைய சமுதாயமாக திகழ்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுத்துள்ளீர்கள் - அதாவது ஜெயித்துக்காட்டுவோம் என்ற உறுதி மொழிதான் அது. இளைஞர்களின் உள்ள உறுதியின் அடுத்த பக்கம் என்னால் முடியும் என்பதாகும். நான் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கவிதையை எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கவிதையின் மூலாதாரம் என்னவென்றால், என்னால் முடியும், நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்பதாகும். அந்த வெற்றிக்கு மூலகாரணமானவைகள் எவை. அறிவு, உழைப்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சி.

    அன்பு மாணவச்செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் இந்த கவிதையை பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

    நான் பறந்து கொண்டேயிருப்பேன்

    நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்

    நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்

    நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்

    நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த

    நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்

    நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்

    நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க

    நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,

    தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,

    பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

    பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக எனது இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    இந்திய மாணவன் உலகத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல

    நான் 11வது குடியரசுத்தலைவராக இருந்த பொழுது, ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்பொழது ஒரு நாள். ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன என்று கேட்டேன். வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக, இன்ஜினியராக, IAS/IPS அதிகாரிகளாக, தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக, அரசியல் தலைவர்களாக ஆவோம் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு பையன் கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த், அவன் 9ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும் தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டேன். அவன் சொன்னான். கலாம் சார், நான் வாழ்க்கையில், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத்தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னான். எனக்கு அவனது உயர்ந்த எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவனிடம், நீ வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக உனக்கு 4 முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன் என்றேன், அதாவது 4 விஷயங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. அவை என்ன.

    1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.

    2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.

    3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.

    4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.

    இந்த நான்கு குணங்களும் உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம் என்று அவனை வாழ்த்தினேன்.

    ஸ்ரீகாந்த் அதோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றான். என்ன ஒரு விடாமுயற்சி, அவன் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியதாகம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute Institute of Technology) யில் கணிணி தொழில் நுட்பிவியல் படிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தான். ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020 & GE Volunteers சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது. பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்பு கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று தெரியவந்தது. உடனே ஸ்ரீகாந்த் MIT க்கு எழுதினான், நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டி தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான். போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள் மத்தியில் பிறந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டான்.

    எழுத்து தேர்வில் நான்காவதாக வந்தான். தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு MIT தலைவணங்கியது. அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப அறிவியல் துறையில் பட்டம் படிக்க அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு. அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பி வைத்த GE கம்பெனியின் மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், நீ படித்து முடித்தவுடன் உனக்கு வேலை ரெடியாக இருக்கிறது என்று. அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பினான். அதில் கடைசியாக எழுதியிருந்தான், ஒருவேளை எனக்கு பார்வையற்ற முதல் குடியரசுத்தலைவர் பதவியடைய முடியாவிட்டால் கண்டிப்பாக உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்று. இதில் இருந்து மாணவர்களாகிய உங்களுக்கு தெரிந்து கொள்ளும் அனுபவம் என்ன. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும் என்பது தான். மற்றொரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ வெற்றியடைய முடியும்

    நான் DRDL, Hyderabadல் டைரக்டராக இருந்த போது, என்னிடம் கதிரேசன் என்பவர் எனது கார் டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது நீண்ட நேரம் பணியில் இருந்து விட்டு நான் காரில் ஏறி வீட்டுக்கு செல்ல வரும் பொழுதெல்லாம், கதிரேசன் எதாவது படித்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது ஒரு நாள் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார், சும்மா இருக்கும் நேரம் படித்தால் எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று படிக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் 10ம் வகுப்பு வரை படித்ததாக சொன்னார். மேலும் படிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டேன். மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் என்னால் எப்படி படிக்க முடியும் என்று வினவினார். உடனே நான் அவரை திறந்தவெளி பள்ளி மூலம் +2 படிக்க ஏற்பாடு செய்தேன். அதை வெற்றிகரமாக முடித்தார். அதன் பின் B.A படித்தார். அப்புறம் நான் டெல்லி சென்று விட்டேன். அனால் அவர் படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தார் M.A முடித்தார், MPhil முடித்தார், பின்பு அரசியல் அறிவியலில் Ph.D படித்து முடித்து டாக்டரேட் பட்டம் பெற்றார். இப்போது அவர் தமிழ்நாட்டில், மதுரைக்கு பக்கத்திலே மேலூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால்.

    நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,

    நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்

    உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

     நீ நீயாக இரு

    தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

    நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

    அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.

    மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். உங்களுடன் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    எனது கிராமப்புர கல்வியின் அனுபவம்

    நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும், உங்களால் வெற்றி அடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    இராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் 1936 முதல் 1944 வரை நான் படித்த போது, கடற்கரையோரம், பாதி கட்டிடமும் பாதி கூரை வேய்ந்த நிலையில் தான் எங்கள் பள்ளி இருந்தது. இராமேஸ்வரம் தீவில் அது ஒரு பள்ளி தான். 400 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்றோம். இப்போது இருக்கும் பல பள்ளிகள் மாதிரி பல் வேறு வசதிகளும், கட்டிடங்களும் இல்லாத பள்ளி அது. அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    எங்கள் கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயரும், அறிவியல் ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களும், மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப் பட்டவர்கள். நான் அப்பொழுது 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தில் 40 மதிப்பெண்களுக்கும் கீழ் தான் எடுத்தார்கள். கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொன்னார், மற்ற பாடங்களில் 80க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள், ஏன் கணிதத்தில் மட்டும், மதிப்பெண் குறைகிறது என்று கேட்டார். மாணவர்கள் நிலையை அறிந்த கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொல்வார், எனது லட்சியம் எனது மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிக்கவைப்பது தான் என்று. அது மட்டுமல்ல, கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைப்பதும் எனது லட்சியம் தான் என்று சொல்வார்.

    உடனே அவர் மாணவர்கள் அனைவரையும் கணிதத்தில் எப்படி ஈடுபாட்டுடன் படிக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை தீட்டி, எங்களுக்கு கணிதத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். எங்களுக்கு என்று கணித சிறப்பு வகுப்பை ஏற்படுத்தினார், அதில் கணிதத்தை அனைத்து மாணவர்களுக்கும் புரியும் படி சிறப்பாக நடத்தினார். எங்களுக்குள் விவாதிக்க வைத்தார். அதன் மூலம், கணிதத்தை எங்களுக்கு எளிமையாக புரிய வைத்தார். அப்புறம் 10 முக்கியமான கணக்குகளை கொடுத்து எங்களை பரிச்சை எழுத வைத்தார். அந்த பரிச்சையில் 90 சதவிகிதம் மாணவர்கள் கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற வைத்தார். அதிலிருந்து கணிதத்தின் மீதிருந்த பயம் மாணவர்களை விட்டு அகன்றது. மகிழ்ச்சியால் அனைவரும் மிதந்தோம். பல வருடங்களுக்கு பிறகு தான், கணிதத்தில் அவர் விதைத்த நம்பிக்கை என்ற விதை எங்களுக்குள் எப்படி பரிணமித்தது என்பதை பற்றி அறிந்து கொண்டோம். எனவே நண்பர்களே, நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை, நாம் ஒவ்வொருவருக்கும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த நாட்டில் நம்மால் முடியும் என்ற எண்ணம் மலரும்.

    அறிவு அற்றம் காக்கும்

    எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்கு பிடித்த ஓரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

    அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

    உள்ளழிக்க லாகா அரண்.

    அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும்.

    புத்தகம் படிப்பதின் அவசியம்

    ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல அருமையான புத்தகங்கள் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு சிறு புத்தக நூலகம் அமைவது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்வீர்களா.

    அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்

    கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்

    படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்

    சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்

    அறிவு உன்னை மகானாக்கும்.

    நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான, தொடர்ந்த நண்பனாகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நமக்கு முன்பே பிறந்ததாகும், நமது வாழ்க்கைப்பயணத்தில் அது நம்முடன் கூடவே வரும், அது மட்டுமல்ல தலைமுறை தலைமுறையாக அது நம் அடுத்த தலைமுறையோடும் தொடர்ந்து வரும். எனது இளமைக்காலத்தில் சென்னை மூர் மார்க்கெட்டில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன். அதன் பெயர் "Light from many lamps", அதை "Watson Lillian Eichler" என்பவர் எழுதியிருந்தார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக அது எனக்கு உற்ற தோழனாக இருந்து வருகிறது. அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததினால் அதை பல தடவைகள் பைண்ட் பண்ண வேண்டியதாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த புத்தகம் அரும்பெரும் மனிதர்களின் எண்ணங்களை கொண்டு கண்ணீரை அது துடைக்கிறது. எப்பொழுதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது மனதை ஒரு நிலைப்படுத்தி, சமன்படுத்தி எண்ணத்தை வரைமுறைப்படுத்துகிறது.

    மனசாட்சியின் மாட்சி

    சமீபத்தில் திரு சமர்பண் எழுதிய "Tiya: A Parrot?s Journey Home" என்ற புத்தகத்தை படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஓரு புத்தகம் தான் இந்த புத்தகம். தியா என்ற இந்த புத்தகம் மனசாட்சியை பற்றியதாக இருப்பதால் நாம் ஓவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் திரு சமர்பண். எப்படி நல் மனசாட்சி கொண்ட ஓரு அருமையான பச்சைக்கிளியின் வாழ்வு, தியாவின் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான் அது.

    கோபம் விவேகத்திற்கு அழகல்ல. இதை பச்சைக்கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை, ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஓவ்வொரு வாசகரும் உணர்வார்கள். என்னை கவர்ந்த ஓரு முக்கியமான செய்தி என்னவென்றால்.

    எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.

    வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,

    என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.

    புத்தகமும் சிறு வயதில் அரும்பெரும் எண்ணங்களும்

    நண்பர்களே, புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப்பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், நல்ல புத்தகங்களின் மூலம் படித்து, கற்று தேர்ந்தால் தான், நாம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாறமுடியும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தொலைக்காட்சிகள் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், எழுத்து, படிப்பு அதிகமாக இருந்தாலும், நாம் தினமும் ஒரு அரை மணிநேரமாவது ஒதுக்கி நல்ல புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    பிறரைக் குறித்து மட்டும் ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான்...... ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும், வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் உண்மையான நோக்கம்....... உளப்பூர்வ விவேகத்தினூடே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களது வாழ்க்கையின் இரண்டாவது அதிசயம் என்று எதைச் சொல்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு. அதாவது, அவரது தனது 9வது வயதில் Magnetism பற்றி அவர் கற்றுக்கொண்டது தான் அவரது வாழ்வின் முதல் அதிசயம். ஐன்ஸ்டீனின் அப்பா அவருக்கு ஒரு காம்பஸ்ஸை தரும் வரை நகரும் ஒரு பொருளை நகர்த்துவது வேறு ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்று தான் நினைத்திருந்தாராம். தனது 12 வது வயதில் அவரது ஆசிரியர் ஒரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகம் தான் Max Talmud எழுதிய Euclidean Plain Geometry என்ற புத்தகமாகும். அந்த புத்தகத்தை அவர் "Holy Geometry Book" என்று சொல்லுவார். அந்த புத்தகத்தை படித்தது தான் ஐன்ஸ்டீனின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது அதிசயம் என்று கூறுகிறார். உண்மையான அர்த்தத்தை நோக்கி, அதனுடன் ஐன்ஸ்டீன் கலந்து விட்டார். மிகப்பெரிய ஆய்வுக்கூடமோ, உபகரணங்களோ இல்லாத சூழ்நிலையிலும், அவர் தனது உள் மனதின் எண்ணத்தின் சக்தியை கொண்டே, உலகலாவிய உண்மையை கண்டுணர்ந்தார். கணித்ததின் கடினமான விடை தெரியாத புதிர்கள் தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தது. அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான். எனவே நண்பர்களே, புதுமை என்பது உலகின் இயல்பில் பயணிப்பவர்களால் உருப்பெறுவதில்லை. உலகின் சராசரி போக்கிலிருந்து முரண்பட்டு தனித்து சிந்திப்பவர்களே புதுமையைப் புஷ்பிக்கிறார்கள்.

    ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்கள் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கணித மேதை, அவருக்கு இயற்கையாகவே கணித்தில் திறமை வாய்க்கப்பெற்றிருந்தார். அவரது 13வது வயதில் அவர் S.L. Loney எழுதிய Advanced Trigonometry என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து, தானே தியரங்களும், அல்காரிதங்களும் படைத்தார். பள்ளியில் யாருக்கும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். அனால் கணித வாழ்வில், உலக மேதையாகி வெற்றியடைந்தார். அதாவது நண்பர்களே, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

    எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்க கற்றுக் கொள்வது தான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பார்த்திராத விஷயங்கள் எதிர்படுவதே எதார்த்தம்.

    வெற்றி என்பது இறுதிப்புள்ளி....

    தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்..

    மன உறுதியுடன் இடைப்புள்ளிகளை

    தோல்வியடையச் செய்து உன்னால் வெற்றியடைய முடியும்.

    வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்விகளைக் கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் தோல்விகள் தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுமைப் பெறச் செய்பவை.

    திருவள்ளுவர் சொன்னது போல்

    இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு

    இடும்பை படா தவர்.

    எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற்றதினால் தான், அப்படிப்பட்ட ஒரு தனித்திறமை அவருக்கு கணிதத்தில் கிட்டியது. அந்த திறமை அவருக்கு புத்தகம் படித்ததினால் மெருகேற்றப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக விளங்கியது. இன்றைக்கும் அவரது எண் கணிதம், அறிவியலை, தொழில் நுட்பத்தை செம்மைப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

    புதிய சிந்தனைகளுடன் படி

    எனவே மாணவர்களே, இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் பாட புத்தகம் மட்டும் படிப்பது உங்களை கல்வியின் அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்லும். ஆனால் அது சம்பந்தமாக, பல்வேறு புத்தகங்களை நூல் நிலையங்களுக்கு சென்று படித்தால், உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகும். அடிப்படை கணிதம், அடிப்படை அறிவியலில் நீங்கள் பல்வேறு புத்தங்களை படித்து தேர்ந்து விட்டீர்கள் என்றால், பின்பு மேல் படிப்பு உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மனப்பாடம் பண்ணுவது ஒரு அறிவியல் தத்துவத்தை, கணித சூத்திரத்தை, தீர்வுக்கான முறையை உங்கள் மனதில் பதிய வைக்காது. ஒவ்வொரு பாடத்தையும் மூன்று முறையாவது ஆழப் படித்து, உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் விவாதித்தீர்கள் என்றால், அது உங்கள் மனதை விட்டு அகலாது. கேள்விகளுக்கு பதில் சொல்லி தெளிவாக்கினீர்கள் என்றால், அது உங்களது வாழ்க்கைக்கும் நினைவிருக்கும்.

    நான் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, எனது தமிழ் ஆசிரியர் திரு பரமேஸ்வரன் அவர்களும், கணித ஆசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களும், வகுப்பு எடுக்கும் போதெல்லாம், சொல்கிற பாடங்களை, நான் அன்றே, அந்த பாடங்களை ஒரு தடவை என்னுடைய நோட் புத்தக்த்தில் அந்த இரவே என் கையால் எழுதி முடித்துவிடுவேன். இந்த பழக்கம், கல்லூரியிலும் நீடித்த்து. தமிழிலும், கணித்த்திலும் பல தடவைகள் ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் வகைகள் பல சமயங்களில், தமிழில் 90 சதவிகிதம் எடுத்திருக்கிறேன். கணிதத்தில் 100 சதவிதம் எடுப்பேன். இதிலிருந்து நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், ஆசிரியர் சொல்வதை புரிந்து அதை பாடமாக எழுதவேண்டும், அது மனதில் என்றென்றும் பதிந்து விடும்.

    எனவே, ஆசிரியர் சொல்லித்தருவது, உங்களுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவது மட்டுமே. ஒவ்வொரு பாடத்தின் முதல் நிலை அறிமுகம் முடிந்தவுடன். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, அந்த பாடத்தின் ஒவ்வொரு பகுதியையும், மாணவர்கள் குழு அவர்களது கற்பனைத்திறத்தோடு, பல்வேறு புத்தகங்களின் துணை கொண்டு, பள்ளியில் விவாதிக்க வேண்டும். கேள்வி கேட்டு மாணவர்களே அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு பாடத்தையும் செய்து பாருங்கள், எந்த படிப்பும் கஷ்டமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையை பள்ளிகளில், வீடுகளில், பள்ளி விடுதிகளில் ஏற்படுத்த வேண்டும். அந்த சூழ்நிலைதான் உங்களை அறிவார்ந்தவர்களாக மாற்றும்.

    எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள், அதானல் பெற்ற அறிவை விவாதித்து தெளிவு படுத்தினீர்கள் என்றால் உங்கள் இலட்சியம் நிச்சயம் ஜெயிக்கும்.

    தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், உங்களை நீங்கள் பக்குவப் படுத்திக்கொள்வதன் மூலம்.

    முடிவுரை

    Dear friends, recently I received a mail from Mr. T.R. Viswanathan, he has explained the beauty of mathematics. Now, take a look at this... How to achieve 101% in life?

    From a strictly mathematical viewpoint:

    1. What Equals 100%?

    2. What does it mean to give MORE than 100%?

    3. Ever wonder about those people who say they are giving more than 100%?

    4. We have all been in situations where someone wants you to GIVE OVER 100%.

    5. How about ACHIEVING 101%?

    6. What equals 100% in life?

    Here&'s a little mathematical formula that might help answer these questions:

    If:

    A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

    Is represented as:

    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

    If:

    H-A-R-D-W-O- R- K

    8+1+18+4+23+ 15+18+11 = 98%

    And:

    K-N-O-W-L-E- D-G-E

    11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%

    But:

    A-T-T-I-T-U- D-E

    1+20+20+9+20+ 21+4+5 = 100%

    THEN, look how far the love of God will take you:

    L-O-V-E-O-F- G-O-D

    12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

    Therefore, one can conclude with mathematical certainty that:

    While Hard Work and Knowledge will get you close, and Attitude will get you there. It&'s the Love of God that will put you over the top! Dear friends, out of all the hard work and the Knowledge that you are gaining from education what you need is the right Attitude and above all love of God to achieve success.

    எனவே, மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே கனவு காண்பது என்பது ஓவ்வொரு குழந்தையின், இளைஞர்களின் வாழ்க்கையின் ஓரு முக்கியமான விஷயம். உங்கள் படிப்பில் வெற்றி பெற்று, உங்கள் கனவை நனவாக்க வாழ்க்கையில் வெற்றி பெற உங்களை வாழ்த்துகிறேன். இந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடத்தும் தினமலர் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நன்றி வணக்கம்.

    இந்நிகழ்ச்சியில், தினமலர் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

    No comments: