ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தால், காலாண்டு தேர்வுகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து, வரும் 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டங்கள் முழுவீச்சில் நடக்கின்றன.
போராட்டத்தில், மற்ற துறைகளை காட்டிலும், கல்வித்துறை ஊழியர்களின் பங்களிப்பே அதிகம். எனவே, பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது.
கடந்த 22ம் தேதி நடந்த, ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில், ஆசிரியர்கள் ஈடுபட்ட போது, கல்வித்துறை மாற்று ஏற்பாடு செய்தது.
பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு, பள்ளியை திறந்ததை தவிர, வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை. கல்வித்துறை அலுவலகங்கள் வெறிச்சோடின. உணவு சமைக்க கூட முடியாமல், சத்துணவு உதவியாளர்கள் அவதிப்பட்டனர். தற்போது, காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தால், காலாண்டு தேர்வுகள் கூட, நடத்த முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜாக்டோ-ஜியோ மாவட்ட தொடர்பாளர் ராஜசேகரன் கூறுகையில்,”மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில், மேற்கொள்ளப்படவுள்ள போராட்டங்கள் குறித்து, கடந்த ஜூலை மாதமே அறிவித்தோம். தொடர் வேலைநிறுத்த போராட்டம், வரும் 7ம் தேதி முதல், திட்டமிட்டபடி நடக்கும்.
காலாண்டு தேர்வு, வரும் 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்த, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்தால், தேர்வு பணிகளும் பாதிக்கும்,” என்றார்.
No comments:
Post a Comment