தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்காக, நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், ஆக., 31 வரை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தன்னாட்சி அந்தஸ்து பல்கலைகளில், 5,500 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இதுவரை எந்த கல்லுாரி அல்லது பல்கலையில் சேருவதற்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களை, தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கான காலக்கெடு, செப்., 7 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, தன்னாட்சி பல்கலைகளுக்கு மட்டுமே; மற்றவர்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது.
தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை, கவுன்சிலிங்கை நடத்தும் மருத்துவ சேவைகளுக்கான டைரக்டர் ஜெனரல் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அந்தத் தகவல்களை, தன்னாட்சி பல்கலைகளுக்கு, இ - மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. இதன் மூலம், இதுவரை கல்லுாரிகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment