உரிய முறையில் இயங்காத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க, ’நிடி ஆயோக்’ பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசுக்கு, திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை அளித்து வரும் அமைப்பான, ’நிடி ஆயோக்’ மூன்றாண்டு செயல் திட்ட அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாடு முழுவதும், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அதேசமயம், அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து வருகிறது.அதேநேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
ஆசிரியர்களின் வருகை பதிவு குறைவு, குறைவான நேரம் கற்பித்தல், மோசமான கல்வி தரம் போன்ற காரணங்களால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளை விடவும், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதமும் குறைகிறது.
இதற்கு மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. உரிய செயல்பாடு இல்லாமல் இருக்கும், அரசு பள்ளிகளை, தனியார் வசம் ஒப்படைக்கலாம்; அரசு - தனியார் கூட்டு முயற்சியில் பள்ளிகளை நடத்தலாம்.
இதற்கு ஆகும் செலவை, தலா ஒரு குழந்தைக்கு என கணக்கிட்டு, அரசு நிதியில் இருந்து வழங்கலாம். இதன் மூலம், பள்ளிகளை சரி வர நிர்வகிப்பதுடன், ஆசிரியர்களையும் கண்காணிக்க முடியும். பள்ளிகளை நடத்துவதற்காக, அரசு செய்யும் தேவையற்ற செலவு, பெருமளவு குறையும்.
இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி, மத்திய அரசு, புதிய திட்டத்தை உருவாக்கலாம். தயாராக உள்ள மாநிலங்களில், பரிசோதனை அடிப்படையில், அரசு - தனியார் இணைந்து, பள்ளிகளை நடத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment