பள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ், தலா ஒன்று வாங்க மத்திய அரசு அனுமதித்து, நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மானியம், பராமரிப்பு மானியங்களை ஒதுக்கீடு செய்து நிதி வழங்குகிறது.
இதில் குடிநீர், அடிப்படை கட்டமைப்பு வசதி, தீயணைப்பான், பேன், மின் விளக்கு வாங்கவும், பழுது பார்க்கும் பணியையும் மேற்கொள்ளலாம். நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு, 1.32 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறு யூனியன் என மொத்தம், 20 யூனியன்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, 1,307, நடுநிலைப் பள்ளி, 403, உயர்நிலை பள்ளி, 117, மேல்நிலைப் பள்ளி, 145 என மொத்தம், 1,972 பள்ளிகள் நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்தாண்டு ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்கள், வாசிப்புத்திறனை மேம்படுத்தி கொள்ள, ஒரு தமிழ், ஒரு ஆங்கிலம் தினசரி நாளிதழை, நிதியில் வாங்கிக்கொள்ள, மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதே போல் பராமரிப்பு மானியத்தின் கீழ் கழிவறை சுத்தம், குடிநீர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்தல், சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல், கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும், ஒரு கோடியே, 35 லட்சத்து, 82 ஆயிரத்து, 500 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதை, 1,195 துவக்கப் பள்ளிகள், 394 நடுநிலைப் பள்ளிகள், 101 உயர்நிலைப் பள்ளிகள், 121 மேல்நிலைப் பள்ளிகள் நடப்பாண்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மொத்தத்தில் பள்ளி மானியம், பராமரிப்பு மானியமாக இந்தாண்டு மட்டும், 20 யூனியன்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இரண்டு கோடியே, 67 லட்சத்து, 92 ஆயிரத்து, 500 ரூபாய் மத்திய அரசு வழங்கி உள்ளது குறிப்பிட்டதக்கது.
No comments:
Post a Comment