அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அதேபோல, பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198 பி.டி.எஸ்., இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்களும் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ’நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சென்னை, பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக்காக கவுன்சிலிங்கில், 14 இடங்கள் நிரம்பின. இரண்டாம் நாளில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கியது.
அன்று, 1,029; மூன்றாம் நாளில், 1,260 இடங்கள் நிரம்பின. மூன்று நாட்களில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில் உள்ள, 80 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.
இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கிற்கு, 1,596 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர, அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும், பிற்பகலுக்குள் நிரம்பின.
எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்., படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment