நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவக்குவது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன.
ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு, உறைவிடப் பள்ளி. ஆறு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
தமிழக அரசு பதில் மனு:
தமிழ்நாடு தமிழ்வழி கற்பித்தல் - 2006 சட்டத்தின்படி தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. நவோதயா பள்ளி, பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்தி மும்மொழி கொள்கையுடையது. அதில், 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பிற்கு பின், இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படும். தமிழுக்கு வாய்ப்பு மறுக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப் பட்டது. நீதிபதிகள், கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.
புதுச்சேரி, ஜவஹர் நவோதயா வித்யாலயா முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகி கூறியதாவது: நவோதயா பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாய பாடமாக உள்ளது. ஆங்கிலம், கணிதம் உட்பட இதர பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை, கூடுதல் மொழியாக, தமிழ் உள்ளது.
நவோதயாவில் தங்கும்இடம், உணவு, கட்டணம் இலவசம். கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும், 600 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் படித்தவர்கள், தற்போது உயர் பதவிகளில் உள்ளனர். ஆந்திரா குண்டூர் நவோதயா பள்ளியில் படித்தவர் தான், தற்போதைய மதுரை கலெக்டர் வீர ராகவராவ்.
மத்திய அரசு வழக்கறிஞர்:
தமிழக அரசு அனுமதிக்கும் பட்சத்தில், நவோதயா பள்ளி துவக்கத் தயார். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்: நவோதயா பள்ளி என்பது, தமிழக அரசின் இருமொழி கொள்கைக்கு எதிரானது. நவோதயாவில் 8ம் வகுப்பு வரையே தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில், அரசிடம் மேலும் விபரங்கள் பெற அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்:
நவோதயாவில் தமிழ் பாடம் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறுகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து, செப்., 4ல் தெரிவிக்க வேண்டும். அன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
No comments:
Post a Comment