நிகழாண்டில் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் 980 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய குடிமைப் பணிகளுக்கு (யுபிஎஸ்சி) மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிகழாண்டில் குடிமைப் பணியிடங்களுக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட உள்ளனர்? என்பது குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த ஆண்டில் (2016) குடிமைப் பணிகளுக்கு மொத்தம் 1,209 காலியிடங்கள் இருந்தன. அவற்றுக்குத் தகுதியான நபர்களை நியமிப்பதற்காக யுபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டன. அதற்கான இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நிகழாண்டில் தோராயமாக 980 அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: இதனிடையே, மற்றொரு கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ஜிதேந்தர சிங், சரிவர பணியாற்றாத 5 ஐஏஸ் அதிகாரிகளையும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: குடிமைப் பணி அதிகாரிகளின் செயல்பாடுகளை அவர்களது பதவிக் காலத்தில் இரு முறை மதிப்பீடு செய்வது வழக்கம். அதில் அதிகாரிகள் சரிவர பணியாற்றாதது தெரியவந்தால், அவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கப்படும். அந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.
No comments:
Post a Comment