’தகுதி தேர்வு குறித்த அரசாணை வெளியாவதற்கு முன், இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை, தகுதி தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்த முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த சரோஜினி தாக்கல் செய்த மனு: இடைநிலை ஆசிரியராக, 2011 மே, 30ல் நியமிக்கப்பட்டேன். கட்டாய கல்வி சட்டம், 2010 ஏப்ரலில் அமலுக்கு வந்தது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2010 ஆகஸ்ட்டில் ஒரு அறிவிப்பாணையை பிறப்பித்தது.
அதில், ஒன்று முதல் எட்டு வகுப்பு வரைக்கும், பள்ளிகளில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள், கூடுதல் தகுதியாக, தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு, 2011 நவ., 15ல், அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றம், 2013ல் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசின், 2011 நவ., 15 அரசாணைக்கு முன், இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதில்லை.
எனவே, 2011 நவ., 15க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, கட்டாயப்படுத்த முடியாது. இந்நிலையில், 2017 மார்ச், 1ல், பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தார்.
அதில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், கண்டிப்பாக தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற தவறினால், பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அடிப்படையில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், பணியை விட்டு விலகுவதாக, ஆசிரியர்களை நிர்ப்பந்தித்து உத்தரவாதம் பெறப்படுகிறது. தகுதி தேர்வு, வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, எங்களை கட்டாயப்படுத்துவதற்கு, தடை விதிக்க வேண்டும். 2011 நவ., 15க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தும் விதமான, சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவரை போன்று, 2011 ஜூன் மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மூவரும், மனு தாக்கல் செய்துள்ளனர். பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆஜரான, கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ”தகுதி தேர்வு எழுதும்படி, மனுதாரர்களை கட்டாயப்படுத்தி உத்தரவாதம் பெற மாட்டோம்,” என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ராஜா பிறப்பித்த இடைக்கால உத்தரவு; தமிழக அரசு, 2011 நவ., 15ல் பிறப்பித்த அரசாணையை தொடர்ந்து, ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தான், தகுதி தேர்வில் கலந்து கொள்வது என்ற கேள்வி எழும்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 2011 நவ., 15க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால், அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்கும்; இல்லையென்றால் பணியை விட்டு விலகுவது தவிர வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளது.
எனவே, 2011 நவ., 15ல் பிறப்பித்த அரசாணைக்கு முன், ஆசிரியர்களாக பணியில் சேர்ந்த மனுதாரர்களை, தகுதி தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விசாரணையை, வரும், 18க்கு, நீதிபதி ராஜா தள்ளிவைத்துள்ளார்.
No comments:
Post a Comment