’கேரள மாநிலப் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, மலையாளம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்’ என, மாநில அரசு, அவசர சட்டம் இயற்றியுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. ’மாநிலத்தில், பல பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதில்லை; மலையாளத்தில் மாணவர்கள் பேசுவதற்கும், தடை விதிக்கப்படுகிறது’ என, அரசுக்கு அதிகளவில் புகார்கள் வந்தன.
இதையடுத்து, மாநிலத்தில், 10ம் வகுப்பு வரை, மலையாளத்தை கட்டாய பாடமாக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, அவசர சட்டம் கொண்டு வரவும் முடிவு செய்தது.
திருவனந்தபுரத்தில், சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு, கவர்னர் சதாசிவம், நேற்று ஒப்புதல் அளித்தார். இது பற்றி, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
வரும் கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளுக்கும், இந்த சட்டம் பொருந்தும். மேலும், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், 10ம் வகுப்பு வரை, மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.
எனினும், மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மலையாளம் கட்டாயபாடமாக இருக்காது. மலையாளம் கற்பித்தால் மட்டுமே, பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.
மலையாளத்தில் மாணவர்கள் பேசுவதற்கு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தடையும் விதிக்கக் கூடாது. இதை மீறும் பள்ளிகளின் முதல்வர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment