கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் சங்கர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் அவர்களும், நிதிக்காப்பாளாராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் சாஸ்தா சுந்தரம் அவர்களும் தேரந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இளங்கோ, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தவமணி செல்வம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் பூமிநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க வட்டாரச் செயலாளர் தமிழ்ச்செல்வம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பாலசுப்பிரமணியன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாவட்டத் தலைநகரில் வருகிற 19ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சீர் குலைக்கும் வகையில், தமிழக மாணவர்களுக்கும், மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட அதிகார பகிர்வில் உயர்கல்விக்கான தரத்தைத்தான் மத்திய அரசு தீர்மானிக்க முடியும். இளங்கலை மருத்துவ படிப்பிற்கு சேர்க்கைக்கான தகுதியை தீர்மானிக்க மாநில அரசிற்குதான் அதிகாரம் உண்டு. மேலும் மாநில பாடத்திட்டத்திலும் பயிலும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை இத்தேர்வு கேள்விக்குறியாக்கும்.
எனவே மக்களின் சுகாதரம், மாநில அரசின் உரிமை, மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கக் கோரி, ஆசிரியர், மாணவர், பெற்றோர் அமைப்புகளின் கூட்டியக்கமான கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, வரும் 19ல், சிவகங்கை அரன்மணை வாசல் முன்பு மாலை 5 மணிக்கு கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment