தொடர் வறட்சியால், காகிதம் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகத்தில் புத்தகம், நோட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் வளர்க்கும் சவுக்கு, மூங்கில் மரங்களை, ஒப்பந்த அடிப்படையில் காகித ஆலை நிறுவனங்கள் வெட்டி எடுத்து வந்து, மரக்கூழ் தயாரித்து, அதில் சில மூலப்பொருட்களைச் சேர்த்து காகிதம், நோட்டு, புத்தகங்களைத் தயாரிக்கின்றன.
தற்போது நீர் நிலைகள் வறட்சியானதால், இம்மரங்கள் பட்டுப்போய் உள்ளன. கடந்த ஓராண்டில், காகித உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மூன்று முறை காகிதத்தின் விலை உயர்த்தப்பட்டுவிட்டது.
கடந்தாண்டு, 1 டன், 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான காகிதம், தற்போது, 72 ஆயிரம் ரூபாய் என, ஓராண்டுக்குள் டன்னுக்கு, 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பேப்பர் மற்றும் ஸ்டேஷனரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வறட்சியால், சவுக்கு மரங்களின் வரத்து குறைந்ததால், காகித விலை உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில், 1 டன் காகிதம், 7,000 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பது எதிர்பாராதது.
வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விலை உயரும். இந்தாண்டு, மூன்றுமுறை உயர்ந்துவிட்டது. இதனால், சாதாரண நோட்டு, புத்தகம் கூட, ஒரு குயர் அளவிலானது, மூன்று ரூபாய் வரை அதிகரித்து விற்க வேண்டி உள்ளது.
கடந்தாண்டு, இரண்டு குயர் லாங் சைஸ் நோட்டு, 38 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 43 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்ற பைண்டிங் இல்லாத நோட்டுகள் தற்போது, 35 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment