’நீட்’ தேர்வு கட்டாயமானதால், தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மீண்டும், பிளஸ் 1 பாடங்களை படித்து, பயிற்சியை துவக்கி உள்ளனர். அகில இந்திய அளவில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, ’நீட்’ என்ற, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.
தமிழகத்தில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர மட்டும், இந்தத் தேர்வு கட்டாயமாக இருந்தது. இந்த ஆண்டு, அனைத்து கல்லுாரிகளுக்கும் கட்டாயமாகி உள்ளது.’நீட்’ தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது.
தமிழக மாணவர்களுக்கு, இந்தத் தேர்வில் விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு, மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், தமிழக அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பாமல், மாணவர்கள், ’நீட்’ தேர்வுக்கு தயாராகின்றனர்.
பெரும்பாலான தனியார் பள்ளிகள், நேரடியாக பயிற்சி மையங்களை அணுகி, ’நீட்’ தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றன. சிறப்பு ஏற்பாடு செய்யாத பள்ளிகளின் மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில், தாங்களே நேரடியாக சேர்ந்து, பயிற்சி பெறுகின்றனர்.
’நீட்’ தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம்பெறும் என்பதால், அந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்ணை குறிக்கோளாக கொண்டு, பாடம் நடத்தும் பள்ளிகள், 10ம் வகுப்புக்கு பின், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே நடத்தி வருகின்றன.
இந்த பள்ளிகளில், பாடங்களை வரிக்கு வரி மனப்பாடம் செய்த மாணவர்கள், ’நீட்’ தேர்வில் ஜொலிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அதற்கு முந்தைய, பிளஸ் 1 பாடத்தை, தற்போது படிக்க துவங்கி உள்ளனர்.
இது, தமிழக கல்வித்துறையின் செயல்பாடுகளும், திட்டமிடலும், பள்ளிகளை நடத்தும் விதமும், எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டுவதாக, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment