கோவையில், கல்லுாரி மாணவர்கள் பகுதிநேர வேலையாக கஞ்சா பொட்டலம் கட்டி விற்பனை செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 11 கல்லுாரி மாணவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் ஏராளமான கல்லுாரிகள், பல்கலைகள் நிறைந்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரம் பேர், கோவையில் தங்கி உயர்கல்வி படித்து வருகின்றனர்.
வெளியூர் மாணவர்கள், கல்லுாரி விடுதிகள் மட்டுமின்றி, தனியாக நண்பர்களுடன் அறை எடுத்தும் தங்கியுள்ளனர். கண்காணிப்பு இல்லாத இம்மாணவர்களில் சிலர், தடம் மாறி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கோவை மாநகரில் மட்டும் இரண்டு மாதங்களில் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா பொட்டலம் கட்டி விற்பனை செய்து வந்த, 11 கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இவர்களே நேரடியாக பல்வேறு இடங்களில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து, கோவை கொண்டு வந்து பொட்டலம் கட்டி வந்தது தெரிந்தது. இதற்காக, மாணவர்களின் வட்டாரத்திலேயே, ’நெட்வொர்க்’ அமைத்து, செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கூறியதாவது
கல்லுாரிகள் நிறைந்துள்ள பீளமேடு, சரவணம்பட்டி பகுதிகளில் தான் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. முன்பெல்லாம், பெட்டிக்கடைகளிலும், மாநகரின் எல்லை பகுதிகளிலும், கஞ்சா விற்கும் நபர்கள் பொட்டலம் கட்டி விற்பனை செய்தனர்.
பின், மாணவர்கள் போர்வையில், கல்லுாரிகளுக்குள் சென்று விற்பனை செய்தனர். தற்போது மாணவர்களே கஞ்சா விற்கும் தொழில் செய்ய துவங்கியுள்ளனர். இதற்காக, குறிப்பிட்ட சில கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களுக்குள் ஒரு ’நெட்வொர்க்’ அமைத்துள்ளனர்.
இவர்களே நேரடியாக கஞ்சா கிடைக்கும் பகுதிகளுக்கு சென்று, கிலோ கணக்கில் கொள்முதல் செய்து, கோவை கொண்டு வருகின்றனர். அதன்பின், அதனை கிராம் அளவில் எடை போட்டு பொட்டலம் கட்டி, கல்லுாரிக்குள் கொண்டு சென்று விற்கின்றனர்.
நண்பர்கள் மத்தியில், சொகுசாக வாழ ஆசைப்பட்டு, தங்களது வாழ்வை சீரழித்து கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
போலீசார் கஞ்சா விற்கும் மாணவர்களை கைது செய்தபோது, எடை போடும் இயந்திரம், பிளாஸ்டிக் கவர்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
2 ’டன்’ கஞ்சா பறிமுதல்!கோவை சரகத்துக்குட்பட்ட நான்கு மாவட்டங்களில், 2013ம் ஆண்டு, 219 கிலோ, 2014ம் ஆண்டு 254 கிலோ, 2015ம் ஆண்டு 207 கிலோ, 2016ம் ஆண்டு 800 கிலோ, நடப்பாண்டு இரண்டு மாதங்களில், 200 கிலோ என, சுமார், 2 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, 3 ஆயிரத்து 500 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment