டைப்-1 சர்க்கரையால் பாதிக்கப்பட்ட, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், உணவு, மருந்து பொருட்களை, தேர்வு அறைக்குள் எடுத்து செல்லலாம் என்ற, சி.பி.எஸ்.இ., புதிய நடைமுறையை, மாநில அரசும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு, வரும் 9ம் தேதி, பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தேர்வு மையத்திற்கு, உணவு எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுசார்ந்த சுற்றறிக்கை, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.,தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், ’டைப்- 1 சர்க்கரை நோய் பரவலாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், டைப்- 1 சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி, உணவு, இன்சுலின் உள்ளிட்ட, மருந்து பொருட்கள் உட்கொள்ள வேண்டுமெனில், தேர்வு அறைக்கு எடுத்து செல்லலாம். இதற்கு, தேர்வு கண்காணிப்பாளர்கள் சோதனையிட்டு, அனுமதி வழங்கலாம்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 91 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இங்கு, பிளஸ் 2 வரை, 13 மாணவர்கள், டைப் 1 சர்க்கரையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில், பொதுத்தேர்வு எழுதுவோருக்கு, இந்த புதிய நடைமுறை பெரிதும் பலனுள்ளதாக இருக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின், இந்த புதிய தேர்வு நடைமுறையை, மாநில அரசும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில தலைவர் விசாலாட்சி கூறுகையில், ”டிஸ்லெக்சியா, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில், கூடுதலாக ஒரு மணி நேரம், அனுமதிக்கப்படுகிறது.
அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பிரத்யேகமாக தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது. ”இதே போல், டைப் 1 சர்க்கரையால் பாதிக்கப்பட்டோரும், உணவு, மருந்து பொருட்களை, தேர்வு மையத்திற்குள் எடுத்து செல்ல, அனுமதி அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில், மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால், பள்ளி மாணவர்களுக்கும், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சி.பி.எஸ்.இ., அறிவிப்பை, மாநில அரசும் பின்பற்றினால், பெற்றோர், ஆசிரியர்களும் விழிப்படைவர்,” என்றார்.
No comments:
Post a Comment