'அ' என்ற உயிரெழுத்தை முதன் முதலில் கைப்பிடித்து கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மூலம் ஒவ்வொருவரின் கல்வியும் உயிர்பெறுகிறது. ஆசிரியர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் ஆசிரியர்கள் மறுபக்கத்தை ஆலோசிக்க வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கையும் ஒரே நிலையில் இருப்பதாக கொந்தளிக்கின்றனர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் கே.செல்வராஜ், துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார்.
"தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றாலும் தங்களால் முடிந்தளவுக்கு ஆசிரியர்கள் கல்வியை கற்றுக் கொடுத்து மாணவர்களை கரை சேர்க்கின்றனர்.'ஸ்மார்ட் கிளாஸ்' என்ற தமிழக அரசின் கனவு இன்றுவரை பேச்சளவிலேயே இருக்கிறது. அதை செயல்படுத்த அக்கறை செலுத்த கல்வித்துறையில் யாருமில்லை.இன்றையக் காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் நிலைக்கு அரசு பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன. எந்த வசதிகளும் இல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுடன் மண் குதிரையில் சவாரி செய்வதைப் போல போராடி வருகிறார்கள்.
அடுத்து, ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. ஆனால், இன்றும் ஓராசிரியர், இராசிரியர்கள் உள்ள பள்ளிகள் அதிகம் செயல்படுகின்றன. அரசு பள்ளிகளில் கல்வித்தரமில்லை என்ற கருத்து பெரும்பாலான பொதுமக்களிடம் நிலவுகிறது. இதன்விளைவு தனியார் பள்ளியை நோக்கி அவர்கள் செல்கின்றனர். தனியார் பள்ளி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இதை தடுக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. தனியார் பள்ளிகளை ஊக்கும்விக்கும் கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. இதை தடுக்க அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏதாவது வகையில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் கல்வித்துறை விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு, பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. இதனால், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், மத்திய அரசு நடத்தும் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் போது பல சிரமங்களை சந்திக்க வேண்டியதுள்ளது. எனவே, மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதம் கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் தொடக்கக் கல்விக்கு மட்டும் 3 சதவிகிதம். ஆனால் இந்த நிதி முழுமையாக கல்வித்துறைக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஆங்கிலத்தில் பின்தங்கி காணப்படுவதை தடுக்கவும், தனியார் பள்ளிகளுடன் போட்டி போடவும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அங்கும் பிரச்னை. ஆங்கில வழிக்கல்வியை நடத்துவதற்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்வழிக்கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே ஆங்கில வழிக்கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் அரசு பள்ளிகளைத் தவிர அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு இதுவரை அனுமதி அளிக்காமல் கல்வித்துறை இழுத்தடித்து வருகிறது.
2003ம் ஆண்டுக்குப் பிறகு பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் ஆசிரியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டததை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அ.தி.மு.க அரசு, கடந்த இரண்டு தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளித்தது. ஆனால் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும், தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் மாத சம்பளத்தில் 10 ஆயிரம் ரூபாய் வித்தியாசம் இருந்து வருகிறது. இதை களைய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம், பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் கிராமங்களில் பணியாற்றுகின்றனர் என்று அரசு தரப்பில் காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனவே வரும் ஊதிய உயர்வில் இந்த குறைகள் களையப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு, பணியில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்டவைகளுக்காக நடுவர் மன்ற தீர்ப்பாயத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ் போல ஐ.இ.எஸ் பயின்ற அதிகாரிகளை கல்வித்துறை நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க நிர்வாகத்துக்கும், கல்விக்கும் எனத் தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்குவது குறித்து கமிஷன் அமைக்கப்பட்டு அந்த பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அரசு தான் முடிவு எடுக்க முடியும். பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆராயப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 90 சதவிகித பள்ளிகள் அனைத்து வசதிகளுடன் செயல்படுகின்றன. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. விரைவில் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
No comments:
Post a Comment