தொடக்கக் கல்வித் துறையில், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில், ஆண்டுதோறும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.
கடந்த, 2013ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தப்பட்டது. இதனால், பதவி உயர்வு கிடைக்காத பட்டதாரி ஆசிரியர் பலரும், பணியிட மாறுதல் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், கடந்த வாரம், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை, உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும், என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பணியிட மாறுதல் நடைபெறும் ஒவ்வொரு முறையும், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, பதவி உயர்வு மறுக்கப்பட்டு வந்தது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்து, பல நாட்களாகியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு, தொடக்கக் கல்வித் துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பதவி உயர்வை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், இந்த கல்வியாண்டில் பதவி உயர்வு வழங்கவே முடியாத நிலை உருவாகும். இதனால், உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 comments:
உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.சங் 37ஃ4
Amma must give promotion
Post a Comment