Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 14, 2012

    அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள்: ஆசிரியர்களுக்கு முதல்வர் அறிவுரை

    ஏழ்மையும், கல்வியறிவின்மையும் தமிழகத்தை விட்டு முற்றிலும் அகலும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசிரியர் பணிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
    தகுதித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரத்து 920 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மேலும் விலையில்லாத காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், க்ரயான்கள், புத்தகப் பைகள், புவியியல் வரைபடங்களை 92 லட்சம் மாணவர்களுக்கு வழங்கும் புதிய திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக, விழாவில் அவர் பேசியது:
    தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும்; கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லாத கல்வி வழங்கப்படுகிறது.

    கிராமப்புற மக்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆரம்பப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாகவும், இடை நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையேதும் இன்றி சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கும் வகையில், 10 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாத லேப்-டாப்களும், கம்ப்யூட்டர் வழிக் கல்வி அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,660 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    முன்எப்போதும் இல்லாத உயர் அளவாக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.14 ஆயிரத்து 553 கோடி நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 ஆயிரத்து 220 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    தகுதி அடிப்படையில் பணி நியமனம்: ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு இரண்டு முறை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நீங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆசிரியர் பணி என்பது அறப்பணி; தன்னலமற்ற சேவைப் பணி. ஆசிரியர் பணியை விடச் சீரிய பணி ஏதுமில்லை. இந்தப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதில்லை. ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மிகத்தை மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியாகும்.

    கரையாத கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்தவொரு தொழிலிலும் தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சிப் பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியர்கள் கண்டு இன்பம் அடைவர்.

    அப்படிப்பட்ட உன்னதமானப் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பணியாகும். இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் எல்லாம்  திறம்பட மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய திறமையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும். அவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    ஆசிரியர், மாணவர் மற்றும் அவரது பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். அதே சமயத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி விட்டதாலேயே தங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடாது.

    பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்த்த உறுதுணையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்தப் படிப்புதான் படிக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆர்வமாகப் படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பில் அடைய முடியாது.

    படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் அதே நேரத்தில் அவர்களின் விருப்பத்திற்கேற்ற பாடத்தை படிக்க அனுமதித்தால் அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி உறுதி.

    ஏழ்மையும், கல்வியறிவின்மையும் தமிழகத்தை விட்டு முற்றிலும் அகலும் வகையில் முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்தார்.

    விழாவில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி முன்னிலை உரையும், துறையின் செயலாளர் டி.சபீதா நன்றியுரையும் ஆற்றினர்.

    கலை நிகழ்ச்சிகளை ரசித்த முதல்வர்
    மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பணிநியமன உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, விழா பந்தலின் ஒரு பகுதியில் தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலை நிகழ்ச்சியில் நடைபெற்றன. வீதி நாடகங்கள், பள்ளிமாணவர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என நடைபெற, சூப்பர் சிங்கர் ஜுனியர்ஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆஜித், "அம்மா என்றழைக்காத...' என்ற பாடலை முதல்வரின் சாதனைகளுடன் சேர்த்துப் பாடி அசத்தினார்.

    இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.  முத்தாய்ப்பாக அவர் பாடிய பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

    1 comment:

    Anonymous said...

    CAN ANY ONE UPDATE PG SALARY