மதுரை காமராஜ் பல்கலையில், தொலைநிலைக்கல்வியில் சில பாடங்களுக்கான புத்தகங்கள் கிடைக்காததால், கட்டணம் செலுத்தியும் மாணவர்கள் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலை துணைவேந்தராக கல்யாணி இருந்தபோது, இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களுக்கான பாடப் புத்தகங்கள், கணினிமயமாக்கப்பட்டு, ’இ போர்ட்டல் லேர்னிங்’ முறை 7 கோடி ரூபாயில் துவங்கப்பட்டது.
அவரது பதவிக் காலத்திற்கு பின், அந்த முறை நீக்கப்பட்டு புத்தகம் அச்சடிக்கப்பட்டதால் தணிக்கையில் கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. இதை நீக்கும் அதிகாரம் கொண்ட துணைவேந்தர் பணியிடம், இப்பல்கலையில், இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால், ’ஆட்சேபணை’யை நீக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இரண்டு ஆண்டுகள் வரை புத்தகம் அச்சடிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தொலைநிலைக் கல்வியில் பி.ஏ., வரலாறு, தமிழ், ஆங்கிலம் முதலாம் ஆண்டு, எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., சைக்காலஜி முதலாமாண்டு உட்பட பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் கிடைக்கவில்லை. எம்.காம்., உட்பட சில பிரிவுகளில் ஒருசில பாடப்புத்தகம் கிடைக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதிவாளராக முத்துமாணிக்கம் இருந்தபோது, கல்வி செயலர் பிறப்பித்த உத்தரவால் ’தணிக்கை ஆட்சேபணை’ நீக்கப்பட்டு புத்தகம் அச்சடிக்கும் பணி துவங்கிய நிலையில், அச்சகத்திற்கு பணம் வழங்குவது மற்றும் பேப்பர் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டு பணி பாதித்தது.
தற்போதைய பதிவாளர் ஆறுமுகம் நடவடிக்கையால், இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது. இந்நிலையில் கரூரில் உள்ள டி.என்.பி.எல்.,க்கு அனுப்பப்பட்ட பேப்பருக்கான பழைய ’டெண்டர்’ தற்போது மறு சீரமைக்கப்பட்டு, அதிக ’டெண்டர்’ தொகை குறிப்பிட்டு பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக கல்வி செயலாளர், பழைய டெண்டரையே தொடர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். இதுபோன்ற காரணத்தால் மூன்று மாதங்களாக புத்தகம் அச்சடிக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அச்சடிக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment