தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இச்சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும்,வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் 2017-2018-ம் கல்வியாண்டு முதல் இந்த சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன்வழி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment