உலக அளவில் இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகள் திடீரென நின்று, ‘கேங்’ ஆனதால் பெரும் குழப்பம் ஏற்பட்டு, பல நாடுகளில் மக்கள் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆந்திரமாநிலத்தில் பல மாவட்டங்களில் போலீசாரின் கணினிகளில் வைரஸ்கள் புகுந்து செயல் இழந்தன. இதனால், அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் திணறினர்.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி , உக்ரைன், தைவான் உள்பட 99 நாடுகளில் சுமார் 45 ஆயிரம் தாக்குதல்கள் நேற்று நடந்திருப்பதாக காஸ்பர்கை ஆய்வக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சைபர் தாக்குதல்களால் அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பினர், ஆலோசனை நேரமும் ரத்து செய்யப்பட்டது.
ரஷ்யாவும் அதிகளவிலான சைபர் தாக்குதல்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளது. ரஷியாவின் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் மிகப்பெரிய வங்கி ஷபெர் வங்கியிலும் இந்த சைபர் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஓர் உள்ளூர் ரெயில்வே பயணச்சீட்டு இயந்திரம் உள்பட பாதிப்படைந்த கணினிகளின் புகைப்படங்களும், இத்தாலியில் ஓர் பல்கலைக்கழக கணினி ஆய்வகத்தின் படமும் பொதுமக்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ஸ்பெயினிலும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட நிறைய நிறுவனங்கள் இந்த இணைய தாக்குதலால் பாதிப்படைந்துள்ளன.
நம் நாட்டிலும் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் போலீஸ் நிலையங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கணனிகளில் வைரஸ் புகுந்து செயல் இழக்கவைத்தன. இது குறித்து ஆந்திர போலீஸ் டி.ஜி.பி கூறுகையில், “ மாநில போலீசார் பயன்படுத்தி வந்த 100-க்கும் மேற்பட்ட கணினிகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விண்டோஸ் ஆப்ரேட்டிங் இருக்கும் கணினிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கான சைபர் ஆயுதங்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமான பெட் எக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் நடத்திய நபர் ஒரு பிரத்யேக புரோகிராமை வடிவமைத்து அனைத்து கணினிகளுக்கும் பரவுமாறு செய்துல்ளார் என்று பாதுகாப்பு மென்பொருள் உருவாக்கும் ஆவாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சைபர் தாக்குதலில் வந்த செய்தியில், 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ரான்சம்வேர் தாக்குதல் எனப்படும் பிணைத்தொகை கேட்கும் இந்த ‘வைரஸ்’ இமெயில்கள் மூலம் அதிவேகமாக பரவியுள்ளன.
இது குறித்து சிமேன்ெடக் எனும் பாதுகாப்பு சாப்ட்வேர் உருவாக்கும் நிறுவனத்தின் ஆய்வு மேலாளர் விக்ரம் தாக்கர் கூறுகையில், “ வானா கிரை எனும் வைரஸ் உருவாக்கி இதை தானாகவே அனைத்து மெயில்களுக்கும் பரவுமாறு வடிவமைத்துள்ளனர். இந்த வைரஸின் பரவத் தொடங்கிய சில மணி நேரத்திற்குள் உலகம் முழுவதிலும் இருந்து 75,000 தாக்குதல்கள் வரை கண்டறியப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment