கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.
கோடை வெயில் தாக்கம் காரணமாக இந் ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும்.
பெற்றோர் அச்சம்
மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்.
அரசுக்கு கோரிக்கை
இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பள்ளிகளை எப்போது திறப்பது என்று அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
2 நாளில் அறிவிப்பு
மேலும் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு 2 நாட்களில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஒரு வாரம் தாமதாக அதாவது ஜூன் 12ம் தேதி திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment