இலவச மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு உத்தரவை, தனியார் பள்ளிகள் பின்பற்றாததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2010 ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள், தனியார் பள்ளிகளில்,கட்டணமின்றி சேர்க்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளியில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை, இத்தகைய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டியது கட்டாயம். ஐந்து வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணமின்றி கல்வி வழங்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கும்.
தமிழக அரசு, அந்த நிதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும். மத்திய அரசு சட்டப்படி, ஐந்து வயது முடிந்த குழந்தைகள், ஒன்றாம் வகுப்பில், இலவசமாக சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த சட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகத்தில் மட்டும் குளறுபடியான நடைமுறை உள்ளது.
அதாவது, தமிழக தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு என்ற பெயரில், எல்.கே.ஜி.,யில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதிலும், மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் தான் சேர்க்கப்படுகின்றனர்.
இது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சகம், பலமுறை எச்சரித்துள்ளது. ஆனாலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை கண்டுகொள்ளவில்லை. அதனால், 2011 முதல், மத்திய அரசு நிதி வழங்கு வதை நிறுத்தியது. எனவே, ஒவ்வொரு ஆண்டும், இலவச மாணவர் சேர்க்கைக்காக, தமிழக அரசுக்கு, 120 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது.
இது குறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது
மத்திய சட்டப்படி, ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன்பின், இலவச மாணவர்சேர்க்கைக்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். ஆனால், தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. அதனால், இதுவரை, 320 கோடி ரூபாயை இழந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment