தமிழக அரசில், காலியாக உள்ள, 2,000 பணியிடங்களுக்கான, ’குரூப் - 2 ஏ’ தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாதது) அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
என்னென்ன பதவிகள்
தலைமை செயலகத்தில் பெர்சனல் கிளார்க், சட்டசபையில் ஸ்டெனோ டைப்பிஸ்ட், வருவாய் துறையில் உதவியாளர், கருவூலம் மற்றும் அக்கவுன்டன்ட், சிறைத்துறை, பதிவுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மீன்வளத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை உதவியாளர்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவு, விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு, ஸ்டேஷனரி அண்டு பிரின்டிங் துறையில் உதவியாளர், அமைச்சகம் சார்ந்த பிரிவுகள், சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் உதவியாளர், நிதித்துறை, சட்டசபை மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க், தமிழ்நாடு பாடநுால் நிறுவனத்தில் உதவியாளர் போன்ற பதவிகளில் மொத்தம் 1,148 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இது தவிர, கூடுதலாக பிற துறை காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது: 1.7.2017 அடிப்படையில், விண்ணப்பதாரர்கள், 18 - 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., / எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, அத்துறை தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களை அறிய டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://tnpscexams.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: மே, 26. தேர்வு தேதி: ஆக., 6.
பாடத்திட்டம்
வினாத்தாள் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1) தமிழ் மொழியை தேர்வு செய்பவர்களுக்கு, பொதுத்தமிழ் பிரிவில், 100 கேள்விகள், பொது அறிவு பிரிவில் (பொது அறிவு 75 + திறனறிவு தேர்வு 25), 100 கேள்விகள் என, 200 கேள்விகள் இடம் பெறும்.
2) ஆங்கிலம் தேர்வு செய்பவர்களுக்கு தமிழுக்கு பதிலாக, பொது ஆங்கிலம் பிரிவில், 100 கேள்விகள் இடம்பெறும்.
வினாக்கள் கொள்குறி அடிப்படையில் கேட்கப்படும். மொத்த கேள்விகள், 200; மதிப்பெண்கள், 300; ஒரு கேள்விக்கு, 1.5 மதிப்பெண் வழங்கப்படும். நெகடிவ் மதிப்பெண் கிடையாது. தேர்வு, 3 மணி நேரம் நடக்கும்.
தேர்ச்சி முறை
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது என்பதால், தேர்வை நன்றாக எழுதினால் வேலை கிடைப்பது உறுதி. விண்ணப்பதாரர்கள் பயன் பெறும் வகையில், ’தினமலர்’ நாளிதழ், நாளை முதல் மாதிரி வினா - விடை வெளியிடுகிறது.
No comments:
Post a Comment