எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தடாலடியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள பணியிட மாற்ற அறிக்கையின் படி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் செய்யப்பட்டு தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு பதிலாக உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நீண்ட காலமாக பள்ளிக் கல்வித் துறையில் இருந்த சபிதா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
*பள்ளிகளை மூடிய செயலர்*
இவர் கல்வித் துறைக்கு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பல மூடப்பட்டன என்றும், அரசு பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன என்றும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தன. என்றாலும், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக சபிதா கல்வித்துறையில் விளங்கி வந்தார்.
*மாற்றுத்திறனாளிகள் வயிற்றில்...*
விரிவுரையாளர் பணிக்கு பார்வையற்றோரை நியமிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய வரலாறுக்கு சொந்தக்காரரும் இவர்தான். ஆசிரியர்கள் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக 6-10-2009 அன்று விளம்பரம் வெளியிட்டது. அதில் பார்வையிழந்த, காதுகேளாதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
*நிபந்தனையற்ற மன்னிப்பு*
இது தொடர்பாக தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், பார்வையற்றோருக்கான இடஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றுவதாக கோர்ட்டில் உறுதி அளித்த பெருமை மிக்கவர் சபிதா.
*தப்பியது கல்வி*
இவர் மீது இடமாற்றம், பணி நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகளில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் இவர் மீது எடுக்கவில்லை. தற்போது இந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment