தமிழகத்தில் நாளை துவங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் வரும் கல்வியாண்டில் +1, +2 பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்ளுக்கு அரசு சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தமிழக மாணவர்கள் தேசிய அளவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான வசதிகளை அரசு செய்யும்.
மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதா என்ற கேள்விக்கு, கிராமப்புறத்தில் இருப்போர் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாததால் அந்த முறை செயல்படுத்தப்படவில்லை என்று பதில் அளித்தார்.
No comments:
Post a Comment