மதுரை மாவட்டத்தில் 'ஸ்மார்ட் கார்டு' வழங்க ஏதுவாக ஆதார், அலைபேசி எண்களை மார்ச் 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால் நுகர்வோர் குழப்பம் அடைந்துள்ளனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது பதிவு பணி நடப்பதால், காலக்கெடு வழங்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்டத்தில் 9.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன.
ஆயிரத்து 387 ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. உணவுப்பொருட்கள் விநியோக முறைகேடு மற்றும் போலி கார்டுகளை ஒழிக்க ஆதார், அலைபேசி எண்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதற்காக ரேஷன் கடைளுக்கு பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அலைபேசி எண்கள் 95, ஆதார் எண்கள் 90 சதவீதத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஏற்கனவே பதிவு செய்யாதவர்களுக்கு சாப்ட்வேர் கோளாறால் உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மறுபடியும் ஆதார் எண்ணை பதிவு செய்து வருகின்றனர். இதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.
இதுவரை மாவட்டத்திலுள்ள 50 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே ஆதார் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆதார் எண் வந்த பிறகு தான் ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும்.இதற்கிடையே கலெக்டர் வீரராகவராவ் அறிக்கையில், ''ரேஷன்கார்டுகளுக்கு ஏப்., 1 முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.
இதற்கு ஆதார் எண் பதிவு செய்திருக்க வேண்டும். எனவே ரேஷன் கார்டிலுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் மார்ச் 10க்குள் பதிவு செய்ய வேண்டும்,'' என தெரிவித்துள்ளார். ஆதார் எண் பதியாமல் சிலர் இருக்கும் நிலையில் பதிவு செய்தவர்களுக்கு ஆதார் கார்டு வராத நிலையிலும், மார்ச் 10ம் தேதிக்குள் ரேஷன்கடைகளில் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால் நுகர்வோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
சில ரேஷன் கடைகளில் குடும்பத்தலைவர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளனர். இதனால் குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டில் பெயர் விடுபடும் நிலை உள்ளது. இதுகுறித்து முறையான அறிவிப்பும் முன்கூட்டியே வெளியிடவில்லை. எனவே ஆதார் எண் பதிவு செய்வதற்காக காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment