அழகப்பா பல்கலையில் இணைப்பு கல்லூரிகளுக்கிடையேயான திறன் வெளிப்படுத்தும் விழா, பண்பாட்டு மையம் சார்பில் நடந்தது.
இதில் சினிமா நடிகர், நாடகவியலாளர் சண்முகராஜன் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டத்தில் வாழக்கூடிய, நெருக்கடியில் இருக்க கூடிய மக்களிடையே தான் வெளிப்படுத்தும் திறன் அதிகமாக காணப்படும். வெளிப்படுத்தும் திறனுக்கு கலையும், கலை பயிற்சியும் பெரும் பங்கு வகிக்கிறது. கலை ஒரு மனிதனின் வெற்றிக்கு தேவையான தன்னம்பிக்கை, ஒருமுகப்படுத்தும் தன்மை, வெளிப்படுத்தும் திறனை மேம்படுத்த உதவுகிறது.
இன்றைய மாணவர்கள் தாங்களாகவே தங்களுக்கு தேவையான படிப்பை தேர்ந்தெடுப்பது இல்லை. பெற்றோர், பிறரின் எண்ணப்படி கல்வி கற்க ஆரம்பிக்கின்றனர். இது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் ஒன்றிவிட வேண்டும். அதற்கு மாணவருக்கு தேவை கலை, கலை பயிற்சி. ஒவ்வொருவரும் தனித்தன்மை பெற்றவர்.
உங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் அனைவராலும் செய்ய முடிவதில்லை. மாறி வரக்கூடிய நுகர்வு கலாசாரம், உலக மயமாதலின் விளைவாக கலை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து கலை கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment