பிளஸ் 2 பொதுத் தேர்வில் பிட் அடித்ததாக பிடிபட்ட 9 பேரில், தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேரை மட்டும் விடுவித்துவிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானலில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வுமையத்தில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. கொடைக்கானலில் உள்ள அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும் அந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து தேர்வு எழுதினர். தேர்வுமைய மேற்பார்வையாளராக வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கு திடீரென வந்த கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் செல்வராஜ், பிட் அடித்ததாக தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 9 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றார். பின்னர் தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேரை, பள்ளி நிர்வாகத்தினர் வந்து அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மண்டல இணை இயக்குனர் கூறியதாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர். மண்டல இணை இயக்குனரின் இந்த செயலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களை மட்டும் விடுவித்து விட்டு, கூலித்தொழிலாளிகளின் மகன்களான அரசு பள்ளி மாணவர் மீது மட்டும் நடவடிக்கை மேற்கொண்ட இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக மாணவர்களும், பெற்றோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு மையத்தில் நடந்த உண்மை சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டு வரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment