பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.
பத்தாம் வகுப்புக்கு, தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இல்லாத, உள்பக்க கேள்விகளாகவும், கடினமானதாகவும் இருந்தன.
புத்தகத்தில் உள்ளது
ஒரு மதிப்பெண்ணுக்கான, ஐந்தாவது கேள்வியாக, தொகைச் சொல்லை விரித்து எழுதுக? என்ற கேள்வி, பாடத்திட்டத்தில் இல்லை என்று சில மாணவர்கள் கூறினர். ஆனால், புத்தகத்தில் உள்ளதுதான் என தமிழாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலம், தமிழ் மொழி மாற்றம் செய்யும் கேள்விகள் இடம் பிடித்தன.
மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் வகையில், பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு சொத்துரிமை; நீர்ப்பற்றாக்குறைக்கான காரணம், நீர் சேமிப்பு முறை, பள்ளி விழாவுக்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்றுப் பேசும் முறை; சாலை வசதி வேண்டி, நகராட்சி ஆணையருக்கு மனு எழுதுதல்; வங்கியில் பணம் எடுக்க விண்ணப்பிக்கும் முறை போன்ற கேள்விகள் இடம் பிடித்தன.
இரண்டு மதிப்பெண்களுக்கான ஒரு கேள்வியில், அரபு எண்களை தமிழ் எண்களாக எழுதும் முறை, வித்தியாசமாக போட்டித் தேர்வு முறை போல், சிந்திக்க வைக்கும் வகையில் இடம் பிடித்தது. அதாவது, 34வது எண் வினாவில், ஆ பிரிவில், நான்கு வகை வாக்கியங்கள் தரப்பட்டன. உதாரணமாக, உன் வகுப்பிலுள்ள மொத்த மாணவர் எண்ணிக்கை என்று குறிப்பிடப்பட்டு, அடைப்புக்குறியில் அரபு எண்ணான, 45 தரப்பட்டு இருந்தது. இதற்கு, 45க்கான தமிழ் வடிவ எண்ணை எழுத வேண்டும்.
திணறினர்
இக்கேள்விக்கு விடை அளிக்க மாணவர்கள் முதலில் திணறினர். ஆனாலும், புரிந்து கொண்டு விடைகள் எழுதியுள்ளனர். இதுகுறித்து, தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ கூறும்போது, "புளூபிரின்ட் மற்றும் புத்தகத்தில் இந்த பாடம் உள்ளது.
அதில், அரபு எண்களை மட்டும் கொடுத்து, அதற்கு தமிழ் எண் எழுத பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதைப் புதுமையாக மாணவர்களை சிந்திக்க வைக்கும் வகையில், வாக்கியமாக கொடுத்துள்ளனர்; இது வரவேற்கத்தக்கது" என்றார்.
No comments:
Post a Comment