நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை.
காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான்.
+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம்.
இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே, இன்ஜினியரிங் சீட் வாங்குவதைவிட, அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதுதான் இன்றைக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது.
எனவே, இன்ஜினியரிங் படிப்பை சிறப்பாக வெற்றிகரமாக முடிக்கக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதை தெளிவாக ஆராய்ந்து, பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும்.
மெடிக்கல் படிப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் குறைந்தளவு கல்லூரிகளே இருப்பதால், மிக அதிகளவு மதிப்பெண் வாங்கியவர்களுக்கான படிப்பாக மட்டுமே அது இருந்து வருகிறது. எனினும், MBBS என்கிற ஒரேயொரு படிப்பிற்கு மட்டும், நாம் முயற்சி செய்வதைத் தாண்டி, மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்தினால், சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகரிக்கும். MBBS போலவே, அதே காலஅளவில் உள்ள மாற்று மருத்துவம் சார்ந்த சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகியவற்றின் மருத்துவப் பட்டப் படிப்புகளும் சமீப ஆண்டுகளில் புகழ்பெற்று வருகின்றன.
தவிர, BDS எனப்படும் பல் மருத்துவப் படிப்பு, MBBS சொல்லித்தரப்படுகிற கல்லூரிகளைவிட, சற்று அதிகமான கல்லூரிகளில், தமிழகத்தில் உள்ளதால், இவற்றில் சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். கூடவே, B.Pharm எனப்படும் மருந்தியல், B.Sc(Nursing), B.P.T எனப்படும் பிசியோதெரபி, கண் மருத்துவம் சார்ந்த ஆப்டோமெட்ரி ஆகியவையும், மருத்துவம் சார்ந்த நாம் கவனிக்க வேண்டிய படிப்புகளாகும்.
மருத்துவத்தில், மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி, கால்நடைகளுக்கான மருத்துவம், காலம்காலமாக புகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் படிப்பு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது.
தவிர, B.F.Sc. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விஷயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென, தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும், கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது, சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.
வேளாண் துறை சார்ந்த படிப்பான B.Sc. (Agriculture), எப்போதுமே வரவேற்புள்ள ஒரு படிப்பாகும். கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், கோவையில் மட்டுமல்லாது, திருச்சி, பெரியகுளம் என பல்வேறு இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளிலும், இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. வேளாண் கல்லூரிகளில், சமீப ஆண்டுகளில் அதிகம் நாடப்படும் இன்னொரு படிப்பு, Horticulture எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பாகும்.
தவிர, கோவை வேளாண் பல்கலையில், ஒருசில சிறப்பு இன்ஜினியரிங் பட்டப் படிப்புகளும் சொல்லித் தரப்படுகின்றன என்பது பலர் அறியாத செய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்த இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, நீங்கள் நேரடியாக கோவை வேளாண் பல்கலைக்கு, தனியாக ஒரு விண்ணப்பம் போட வேண்டும்.
ஒரு காலத்தில், அரசியலில் நுழைய வேண்டுமானால், அதற்கு சட்டக் கல்லூரியில் சேர்வதானது, பாஸ்போர்ட் எடுப்பது போன்றது என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால், இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் சமீப ஆண்டுகளில் சட்டப் படிப்பிற்கான மவுசு கூடிவருகிறது. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களிலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேர +2வில் நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும் போதுமானது.
இப்படியான தொழிற் படிப்புகளுக்கான கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளை வழங்கும் கலை அறிவியல் கல்லூரிகளும், நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும், இந்தக் கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு காலத்திலிருந்த வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு, இன்று நிறைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சொல்லப்போனால், இன்ஜினியரிங் கல்லூரியிலுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி போன்றவை, B.Sc. படிப்புகளாக, கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ் பாடங்களில்கூட, சிறப்புத் துறைகளாக மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி என சிறப்பு பட்டங்கள் தரப்படுகின்றன. சத்துணவு, இந்திய சுற்றுலா, ஹோம் சயின்ஸ், உளவியல் என பெண்களை மையப்படுத்தி, நிறைய சிறப்பு பட்டப் படிப்புகள், குறிப்பாக, மகளிர் கல்லூரிகளில் சொல்லித்தரப்படுகின்றன.
கலை, அறிவியல் கல்லூரிகளில் மிகவும் பிரபலமான இன்னொரு படிப்பு B.Com. என்றாலும், அதோடு சேர்ந்த படிக்க வேண்டிய இன்னும் சில கோர்ஸ்களை நம் மாணவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதாவதாக, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் எனப்படும் CA, காஸ்ட் அக்கவுன்டன்ட் எனப்படும் ICWAI மற்றும் கம்பெனி செக்ரட்டரி எனப்படும் ACS ஆகிய மூன்றும்தான் அவை.
ஒருகாலத்தில், பட்டப் படிப்பை முடித்தப் பிறகுதான், இவற்றை முயற்சி செய்யவே முடியும். ஆனால் இன்று, +2 முடித்து பட்டப் படிப்பில் சேர்ந்தவுடனேயே இவற்றுக்கான தொடக்கநிலைத் தேர்வுகளை எழுத முடியும் என்பதால், பட்டப் படிப்பை படித்துக்கொண்டே ஒரே நேரத்தில், இந்தத் தேர்வுகளையும் எழுதுவதால், மூன்றாண்டு காலம், விரயமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதை, ஒரு காலத்தில், பல வீடுகளில் அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அத்தனைப் படிப்புகளும், தொலைக்காட்சித் துறைக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதால், அந்த எதிர்ப்பு நிலை மாறியுள்ளது.
சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அதேபோல், சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக் கல்லூரியில், இசை மற்றும் நடனம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் சொல்லித் தரப்படுவதோடு, இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன.
உங்களின் ஓவியத் திறமையை மட்டுமே வைத்து பட்டப் படிப்பில் நுழையும் வாய்ப்பு உள்ளது தெரியுமா? சென்னை எழும்பூரிலுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியிலும், கும்பகோணத்திலுள்ள இதே அரசுக் கல்லூரியிலும் BFA எனப்படும் Fine Arts பட்டப் படிப்பு, பல்வேறு சிறப்பு பிரிவுகளில் சொல்லித் தரப்படுகிறது. இதில் சேர, உங்களது ஓவியத் திறமையைப் பரிசோதிக்கும் நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, அதன்மூலம் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். இரண்டுமே அரசுக் கல்லூரிகள் என்பதால், கல்விக் கட்டணமும் மிகக் குறைவுதான். இன்று தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் பல்வேறு ஆர்ட் டைரக்டர்களும் இக்கல்லூரிகளின் மாணவர்களே!
சமீப ஆண்டுகளில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் படிப்புகளில், முக்கியமான இன்னொரு படிப்பு பேஷன் டெக்னாலஜி. சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக் கல்லூரியான NIFT எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி போன்ற டிசைனிங் கோர்ஸ்கள், பட்டப் படிப்புகளாக சொல்லித் தரப்படுகின்றன.
சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், எப்போதுமே நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் படிப்புகளாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கப்பல், விமானம் என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வேலைபார்க்கும் வாய்ப்பை கேட்டரிங் படிப்புகள் தருவதால், அதுசார்ந்த ரசனை உள்ளவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.
அதேபோல், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் விளம்பரம் என, ஊடகத்துறை வளர்ச்சி, இன்று சிறப்பாகவே இருந்து வருவதால், மீடியா படிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Media போன்ற பட்டப் படிப்புகளும், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய படிப்புகளாகும்.
எனவே, காலங்காலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரேமாதிரியான படிப்புகளையே தேர்ந்தெடுக்காமல், உங்கள் ரசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, வித்தியாசமான ஒரு பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதே சிறப்பான அமையும்.
No comments:
Post a Comment