நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பல தனியார் பள்ளிகளில், மந்தமான படிக்கும் மாணவர்களை வெளியேற்றும் முயற்சி நடக்கிறது" என்ற அதிர்ச்சி புகார் வெளியாகி உள்ளது.
அரசு பொதுத் தேர்வுகளின் போது தனியார் பள்ளிகளின் மாணவர்கள் மட்டுமே, கடந்த பல ஆண்டுகளாக சாதித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்களும், மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதித்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் அரசு பள்ளிகளின் தேர்ச்சிவிகிதம் அதிகரித்து வருகிறது.
ஆனால், "அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை" என்ற காரணத்தை முன்வைக்கும் பெற்றோர்கள் பலர், தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கில், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த பொதுத்தேர்வில் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை கோட்டை விட்டன. தொடர்ந்து, பல தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தினர் தலைமை ஆசிரியர்களை கடுமையாக சாடியுள்ளதுடன், அடுத்த பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், மந்தமான நிலையில் படிக்கும் மாணவர்களை, பெற்றோர் சம்மதத்துடன் கூடிய கடிதத்தை பெற்று, "டியூசன்" சென்டர்கள் மூலம் தேர்வு எழுத வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 9 மற்றும் 11ம் வகுப்புகளில் சரியாக படிக்காத மாணவர்களை வெளியேற்றும் முயற்சியும் நடந்து வருவதாகவும் சில பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பொதுவாக படிக்காத மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பாடங்களை சொல்லி கொத்து, மேம்படுத்த வேண்டிய "பாடசாலைகள்" இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் செயல் என, பல பெற்றார்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக செயலர் ஜார்ஜ் பிலிப் கூறுகையில், "நீலகிரியில் பல தனியார் பள்ளிகள் மட்டுமின்றி சில அரசுப்பள்ளிகளும் "சென்டம்" கனவில் படிக்காத மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இந்த செயல் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதுடன், தாழ்வு மனப்பான்மைக்கும் வழிவகுக்கும்.
ஒரு குறிப்பிட்ட மாணவ சமுதாயம் இதனால் சீரழித்துவிடும் அபாயம் உள்ளது. முற்றிலும் தவறான இந்த செயலில் ஈடுபடும் பள்ளி நிர்வாகங்கள் குறித்து, கல்வித்துறையினர் நேர்மையான விசாரணை நடத்தி, இத்தகைய செயல்களை தடுக்க முன்வர வேண்டும். இது குறித்து மாநில முதல்வருக்கும் மனு அனுப்பி உள்ளோம்" என்றார்.
No comments:
Post a Comment