மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடையே சிக்கி உண்மையிலேயே படிக்க விரும்பும் மாணவர்கள் தவிக்கின்றனர்.
இப்பல்கலையில் 4 ஏப். 2012ல் 14வது துணைவேந்தராக பொறுப்பேற்ற கல்யாணி, யு.ஜி.சி. விதிப்படி பத்து ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றவில்லை என்று காரணம் காட்டி சிலரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரது நியமனம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு துணைவேந்தர் தரப்பில் முயற்சி செய்துவருகின்றனர். இதற்கிடையே ஒருசில ஆசிரியர் சங்கங்கள், பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஒன்றிணைந்து துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தை துவக்கியுள்ளனர். மதுரை கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து நேற்றும் மனு அளித்தனர்.
இதற்கிடையே துணைவேந்தருக்கு எதிராக சில அமைப்புகள், பல்கலை வளாகத்திற்குள் நேற்று முன் தினமும் நேற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடின. பல்கலை சுவரெங்கும் துணைவேந்தருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டன.
இச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, துணைவேந்தர் ஆதரவு ஆசிரியர்கள், ஊழியர்கள் பல்கலை வளாகத்திற்குள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர் தரப்பும் அருகே இருந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக துணைவேந்தருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இதுபோன்று நடக்கும் பல்வேறு போராட்டங்களால் மாணவர்கள் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. ஒருசில ஆசிரியர் சங்கங்கள், சங்க ரீதியான மாணவ அமைப்புகளை உடன் இணைத்து போராட்டங்களை தொடர்கின்றன.
பல்கலை பிரச்னையை நன்கு அறிந்த பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: மொட்டை பெட்டிஷன் கலாசாரத்தில் கொடிகட்டி பறக்கும் இப்பல்கலைக்கு, 2012ல் துணைவேந்தர் பேனலில் கல்யாணி உள்ளார் என்ற தகவல் தெரிந்ததுமே, அறிவிப்பே வெளியாகாத நிலையில், அவர் மீது கவர்னர் அலுவலகத்திற்கும் உயர் கல்வி துறை அதிகாரிகளுக்கும் சிலர் புகார்கள் அனுப்பினர். அதன்பின், கல்யாணியே துணைவேந்தராக தேர்வாகி பொறுப்பேற்றார்.
இதன் பின், அவர் மீது புகார் தெரிவித்த அந்த ஒரு சிலருக்கும், துணைவேந்தருக்குமான ஈகோ போ&' தொடங்கியது. பல்கலையில் பிஎச்.டி. என்ற பெயரில் பல ஆண்டுகளாக விடுதிகளை விதிமீறி ஆக்கிரமித்து, மானியங்களை அனுபவித்து கொண்டிருந்தவர்களை கண்டுபிடித்து அதிரடியாக கல்யாணி வெளியேற்றினார். அதேபோல் பயோ டெக்னாலஜி துறையில் இருந்த ஒரு பேராசிரியர், அந்த பதவிக்கு தகுதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி, அவரை பதவியிறக்கம் செய்து, அந்த பதவியில் அந்த பேராசிரியருக்கு கீழ் பணியாற்றிய தகுதியுள்ள பெண் பேராசிரியரை நியமித்தார்.
இதுபோன்ற துணைவேந்தரின் சில நடவடிக்கைகளால், அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்தன. பல ஆண்டுகளாக தொடரும் போராட்டங்களால் நடுநிலை மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.
மாணவர்கள் சிலர் கூறுகையில், "எங்களுக்கு படிப்பு முக்கியம். ஆனால், ஒவ்வொரு நாளும் பல்கலை வளாகத்திற்குள் போராட்டங்கள், கோஷங்கள் என அலைக்கழிக்கின்றனர். ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்னைக்காக ஒட்டுமொத்த மாணவர்களையும் திசை திருப்புகின்றனர். பிரச்னையின்றி பல்கலை செயல்பட அரசு தலையிட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
No comments:
Post a Comment