நாமக்கல்லில் இரவில் நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக கடந்த இருவாரமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதலை பொறுத்தவரை நாமக்கல் மாவட்டத்தில் தமிழ், கணிதம் ஆகிய காலிப்பணியிடங்கள் இருந்தும் அவை முழுமையாக மறைக்கப்பட்டுவிட்டதால், தமிழ், கணித பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று சென்றுள்ளனர். கடந்த இரு நாட்களாக இரவில் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருவதாவல் ஆசிரியர், ஆசிரியைகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெளி மாவட்ட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்றது. இரவு 6 மணிக்கு மேல் தான் ஆன்லைனின் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டது. இதனால், காலையில் இருந்து காத்திருந்த ஆசிரியர்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்த கவுன்சிலிங் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தான் முடிவடைந்தது. மொத்தம் 34 பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்றுள்ளனர்.
நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெற்றது. இதில், சுமார் 40 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட கவுன்சலிங் ஆன்லைன் ஓபன் ஆகாததால் மாலை 4 மணிக்கே துவங்கியது. இந்த கலந்தாய்வு நேற்று இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் தான் நடைபெறுகிறது. சென்னை பள்ளிகல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்தே காலிப்பணியிடங்கள் வெளியிடப்படுகின்றன. இரவில் நடந்தாலும் ஆசிரியர்கள் மாறுதல் வேண்டும் என்ற நோக்கில் ஆர்வமுடன் வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த இரு நாட்களாக இரவில் கவுன்சலிங் நடைபெறுவதால் கவுன்சலிங் நடத்தும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களும் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
ஹெச்.எம்.கள் இடமாறுதலில் குளறுபடி நீடிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 18 தலைமை ஆசிரியர்களின் பணியிடம் காலியாக இருந்தும் 10 தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே இதுவரை மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2 தலைமை ஆசிரியர்கள் பள்ளிகல்வித்துறை இயக்குனர் மூலம் நேரடி மாறுதல் பெற்றுள்ளனர். 8 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் யார் என தெரிவில்லை. அந்த பள்ளிகள் ஆன்லைன் கலந்தாய்வின் போது காட்டப்படவில்லை.
முதுகலை ஆசிரியர்களாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பணியாற்றி வரும் சிலர் அந்த பள்ளிகளை பிளாக் செய்துள்ளதாக பரவலாக கூறியபோதும், கவுன்சலிங் முடிந்து இருவாரமாகியும் தலைமை ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. பதவி உயர்வுக்கான தகுதி வரும் முன்பே சிலர் பள்ளிகளை பிளாக் செய்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல இரண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமும் ஆன்லைன் கலந்தாய்வின் போது மறைக்கப்பட்டுவிட்டது. முதுகலை ஆசிரியர்கள் மாறுதலில் பெரும்பாலான பணியிடங்கள் மறைக்கப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் பள்ளிகளை மாற்றும் முதுகலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு பள்ளிகளை மாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment