கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இதற்காக மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட வெளி மாவட்ட ஆசிரியர்கள் நேற்று காலை 9:00 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். வெகு நேரமாகியும் கலந்தாய்வு துவங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "காலை 9:00 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலை 5:00 மணி வரை துவங்காததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளோம். கலந்தாய்வு முடிந்த பிறகே வீட்டிற்கு செல்வோம்" என்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கம்ப்யூட்டரில் சர்வர் இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், குறிப்பிட்ட நேரத்திற்கு கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. சர்வர் இணைப்பு கிடைத்ததால் வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிந்து விட்டது. மற்ற ஆசிரியர்களுக்கும் படிப்படியாக இன்றைக்குள் (நேற்று) மாவட்டம் விட்டு மாறுதலுக்கான ஆணை வழங்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment